Published : 06 Jul 2019 03:58 PM
Last Updated : 06 Jul 2019 03:58 PM

டிக்டாக் மோகம்: 16 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண்: போக்சோ சட்டத்தில் கைது

சென்னையில் படித்துக்கொண்டிருந்த மாணவனுக்கும், செவிலியர் ஒருவருக்கும் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டதில் மாணவனை திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துக்கொண்டார். ஆட்கொணர்வு மனு மூலம் சிறுவன் மீட்கப்பட்டார்.

டிக்டாக் மோகம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர், நடுத்தர வயதினர் யாரையும் விட்டு வைப்பதில்லை. டிக்டாக்கில் டபுள் விண்டோ என இணைந்து பாடல் பாடுவது, வசனம் பேசுவது போன்ற செயல்களில் திருமணமான பெண்கள் வேறு ஆண்களுடன் டூயட் பாடுகின்றனர். இதில் பலரும் வரம்புக்குள் இருந்தாலும் சிலர் இந்த நட்பில் சிக்கி அது தொடர்ந்து தவறான பாதைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு ஒரு சிறுவன் டிக்டாக்கில் செவிலியர் ஒருவருடன் பழக்கமாகி, டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, சினிமா காதல் வசனங்களை பேசுவது என தொடர்ந்த நட்பால் தன்னைவிட 7 வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சிறுவனை கடத்திச் சென்றார் அந்தப்பெண் 8 மாதத்துக்குப்பின் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் சென்னை கிண்டியில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளார். அவரது தந்தை துபாயில் நண்டு, இறால் தொழில் செய்து வருகிறார். சிறுவன் டிக்டாக்கில் அதிக ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். சினிமா காதல் பாடல்களுக்கு நடிப்பது, சினிமா காதல் வசனங்களை பேசி நடித்து பதிவு செய்து வந்துள்ளார்.

இதனால் சிறுவனுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் இருந்துள்ளனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த 23 வயது செவிலியர் ஒருவர் அவருடன் டிக்டாக்கில் டபுள் விண்டோவில் டூயட் பாடியுள்ளார்.அதன்மூலம் நெருக்கமாகியுள்ளார். இருவரும் டிக்டாக்கில் அதிக நேரம் செலவழித்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் நெருக்கமாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மாணவர் திடீரென மாயமானார். அவர் காணாமல்போனது குறித்து துபாயில் இருந்த தந்தைக்கு ஐடிஐ நிறுவனத்தினர் தகவல் தெரிவிக்க அவர் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கம்போல் போலீஸார் மிஸ்ஸிங் கம்ப்ளைண்டாக பதிவு செய்து கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதையடுத்து மாணவனின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய போலீஸார் விரைவில் சிறுவனை கண்டுபிடித்து விடுவதாக கூற நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அதன் பின்னரும் போலீஸார் அலட்சியம் காட்ட 3 மூன்று முறை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கலாக 4 வது முறை கோபமடைந்த நீதிபதி காவல் உயர் அதிகாரி ஆஜராக நேரிடும் என தெரிவிக்க போலீஸார் வேகமெடுத்தனர்.

சிறுவனின் செல்போன் எண்ணை சோதித்தபோது அது கோயம்பேடு அருகே சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. இந்நிலையில் திடீரென சிறுவனின் செல்போன் எண்ணில் வேறொரு சிம்கார்டு இயங்க போலீஸார் அதை ட்ரேஸ் செய்தபோது அது திருப்பூரை காட்டியது. திருப்பூர் ஊத்துக்குழிக்குச் சென்ற போலீஸார் சிம் கார்டுக்குரிய நபரை பிடித்தனர்.

அவர் சென்னையில் சிறுவனுடன் பழகிய செவிலியர் என தெரியவந்தது. கையில் 40 நாள் குழந்தையுடன் இருந்த அவரிடம் சிறுவன் குறித்து போலீஸார் கேட்டபோது, சிறுவன் தன்னுடன்தான் இருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாகவும், இருவருக்கும் பிறந்த குழந்தைதான் இது என கூறியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், இருவரையும் சென்னை அழைத்து வந்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சையில் இருந்த தனக்கும் சென்னையில் இருந்த சிறுவனுக்கும் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட தனக்கு திடீரென வீட்டில் திருமணம் செய்து வைத்ததால் சென்னை தப்பி ஓடிவந்துவிட்டதாகவும், சென்னையில் சிறுவனை சந்தித்து அவனுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் திருப்பூருக்குச் சென்று திருமணம் செய்து அங்கு கூலிவேலை செய்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருவரையும் உயர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். குழந்தைக்கு தந்தை என்றாலும், கணவன் என்று கூறினாலும் சிறுவன் 18 வயது நிரம்பாதவன் ஆகவே பெண்ணின்மீது ஆட்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைக்குழந்தையின் நலன் கருதி அது தாயுடன் காப்பகத்தில் இருக்கவும், குழந்தையின் பாதுகாப்புக்காக அதன்பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவனும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். டிக்டாக் போன்ற செயலிகள் சமூகத்தின் சீரழிவுக்கு ஒரு காரணமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் அதற்கு வலு செர்ர்க்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x