Published : 09 Jul 2019 12:32 PM
Last Updated : 09 Jul 2019 12:32 PM

தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்: தினகரன் கண்டனம்

தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் உள்ளதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கம் முதலே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிலவி வரும் குளறுபடிகளின் உச்சமாக நிகழ்ந்திருக்கும் இத்தவறை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

நடப்புக் கல்வி ஆண்டுக்கான பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துவதில் தொடக்கத்திலேயே ஆரம்பித்த குளறுபடிகள், நேற்றைய இணையதள முடக்கம் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தமிழக அரசு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு மிகவும் தாமதமாக தமிழக ஒதுக்கீட்டுக்கான மருத்துவ தர வரிசைப் பட்டியலை இருதினங்களுக்கு முன் வெளியிட்டனர். அந்தப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் இடம் பெற்றிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்றது எப்படி?

ஏற்கெனவே நீட் தேர்வால் கிராமப்புற மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவுகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. இந்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழக மாணவர்களின் வாய்ப்புகளையும் பறிக்கின்ற தமிழக அரசின் இந்தப் பொறுப்பற்ற செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

இதை எல்லாம் கவனிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், தனது கட்சிக்கு ஆள் பிடிக்கிற வேலையில் மும்முரமாக இருக்கிறார். அரசும், அமைச்சரும் இப்படி இருக்கும் போது 'நமக்கென்ன?' என்று அதிகாரிகளும் தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, எந்தவித தாமதமும் இன்றி வெளி மாநில மாணவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தரவரிசைப் பட்டியலைப் புதிதாக வெளியிட வேண்டும். அதே போன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களுக்கு அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x