Published : 03 Jul 2019 03:33 PM
Last Updated : 03 Jul 2019 03:33 PM

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் வழங்க மறுப்பது செம்மொழிக்கு செய்யப்படும் துரோகம்: அன்புமணி விமர்சனம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் வழங்க மறுப்பது செம்மொழிக்கு செய்யப்படும் துரோகம் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் இனி வரும் காலங்களில் ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு, அஸ்ஸாமி ஆகிய மொழிகளிலும் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்புகளை வழக்குதாரர்களின் மாநில மொழிகளில் வெளியிடும் உச்ச நீதிமன்றத்தின்  முடிவு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் தமிழ் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்கள் தங்களின் வழக்கு குறித்த விவரங்களை தாங்களே படித்து தெரிந்துகொள்ள வசதியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டுதல்களுக்கு உரியவர் ஆவார்.

28.10.2017 அன்று கொச்சியில் நடைபெற்ற கேரள உயர் நீதிமன்ற வைர விழாவில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,"உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. பல மொழி பேசும் மக்கள் வாழும் இந்நாட்டில் வழக்குதாரர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாக இருக்கலாம். அதனால் தீர்ப்பின் நுணுக்கமான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாமல் போகலாம். இதனால் அவர்கள் தீர்ப்பை மொழியாக்கம் செய்ய வழக்கறிஞரையோ அல்லது வேறு நபரையோ சார்ந்திருக்க வேண்டும். இது அவர்களின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும்" என்று கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தச் செயல் புரட்சிகரமானது என்பதில் ஐயமில்லை.

அதேநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து தொடரப்படும் வழக்குகளின் தீர்ப்பை தமிழிலும் வழங்க உச்ச நீதிமன்றம் முன்வராததும், அதற்காக உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அளிக்கப்படும் விளக்கங்களும் ஏற்கத்தக்கவை அல்ல; நியாயமானவையும் அல்ல.

எந்தெந்த மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றனவோ, அந்த மாநிலங்களின் மொழியில் மட்டுமே முதற்கட்டமாக தீர்ப்புகள் மொழிபெயர்த்து வழங்கப்படவுள்ளன என்றும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் விரைவில் இந்தச் சேவை தொடங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது சரியல்ல.

உச்ச நீதிமன்றத்தில்  அதிக அளவில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து செய்யப்படும் மேல்முறையீடுகளை விட பலமடங்கு அதிக மனுக்கள் தமிழ்நாட்டிலிருந்து தாக்கல் செய்யப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது ஒடியா, அஸ்ஸாமி ஆகிய மொழிகளுக்கு தரப்படும் முன்னுரிமையை தமிழுக்கு தர மறுப்பது அநீதியாகும். செம்மொழியான தமிழுக்கு இவ்வாறாக இழைக்கப்படும் துரோகங்கள் தமிழர்களைக் காயப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க உச்ச நீதிமன்றத்தால் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மென்பொருள் மூலமான மொழிபெயர்ப்புகள் துல்லியமாக இருக்காது என்பதும், பல மொழிபெயர்ப்புகள் பொருள்பிழை நிறைந்து காணப்படுவதும் கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனிதவழி மொழிபெயர்ப்பு தான் சரியானதாக இருக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மொழி பேசும் மாநிலங்களின் உதவியைக்கூட  உச்ச நீதிமன்றம் கேட்டுப் பெறலாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கேட்டுக்கொண்டதும், அதற்கு அப்போதைய தமிழக அரசு ஒப்புக்கொண்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட  வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 06.12.2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மாநில மொழிகளில் தீர்ப்பு வழங்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதால் தமிழத்தின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளே மாநில மொழிகளில் வழங்கப்பட இருப்பதாலும், மாநில மொழிகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறியிருப்பதாலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு குடியரசுத்  தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்", என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x