Published : 02 Jul 2019 01:18 PM
Last Updated : 02 Jul 2019 01:18 PM

சுயநலத்தால் விலகிச் செல்கின்றனர்; கட்சி பலப்படும்: டிடிவி தினகரன் கருத்து

நிர்வாகிகள் விலகிச் செல்லச் செல்ல கட்சி பலப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுகவும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.  சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. இதனால் கட்சித் தலைமை மீது அமமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகிய நிலையில், தேர்தல் முடிந்தபிறகு விலகிய மைக்கேல் ராயப்பன் அதிமுகவில் இணைந்தார்.

அதேபோல அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து அமமுக அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அமமுக முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகிச்செல்வது குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''நிர்வாகிகள் சொந்தக் காரணங்களுக்காகவும் சுயநலத்துக்காகவும் கட்சியில் இருந்து வெளியே செல்கின்றனர். அதை நாம் தடுத்து நிறுத்தி என்ன ஆகப்போகிறது?

எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள், வேறு இடம் தேடிச் செல்வதால் எங்களின் இயக்கம் மேலும் வலுவடையும். அவர்களின் பாதிப்பில்லாமல் சிறப்பாகச் செயல்படுவோம்'' என்றார் டிடிவி தினகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x