Published : 13 Jul 2019 09:36 AM
Last Updated : 13 Jul 2019 09:36 AM

சென்னையில் இரண்டு இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சென்னையில் இரண்டு இடங்களில் காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக ஐஎஸ், அல்கொய்தா போன்றவை இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளைச் செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. நவீன தொழில்நுட்பக் காலத்தில் பல்வேறு வகைகளில் இளைஞர்களை ஈர்த்து அவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

தவறான புரிதல் காரணமாக மேற்கண்ட இயக்கங்களில் சேரும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். ஐஎஸ் அமைப்பில் கேரளாவில் அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்திலும் இளைஞர்கள் இணைந்து ஐஎஸ் அமைப்புக்குப் பணம் திரட்டுவது, ஆட்களைச் சேர்ப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தடுக்க தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கேரளாவில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாகக் கருதி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கோவையிலும் சென்னையிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் அல்கொய்தா மற்றும் வஹாபி இஸ்லாம் என்கின்ற இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில்   டெல்லியில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சென்னை மண்ணடி லிங்கி செட்டித் தெரு மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பின் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் முடிவில் என்ன காரணத்திற்காக சோதனை நடத்தப்பட்டது? யார் யாருக்கு தொடர்பு உள்ளது? போன்ற விவரங்கள் தெரியவரும். இதுவரை நடந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை என என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x