Published : 13 Jul 2019 04:33 PM
Last Updated : 13 Jul 2019 04:33 PM

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கான தங்குமிடத்துடன் கூடிய இலவச பயிற்சி: மாணவர்கள் விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு

யுபிஎஸ்சி-ன் கீழ் நடக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கு பயிற்சிப்பெற அரசு சார்பில் தங்குமிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது, இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வருமாறு:

சென்னையில் பசுமைவழிச் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளை எழுத பயிற்சி அளித்து வருகிறது.

இப்பயிற்சி மையம் வகுப்பறைகள், தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி உணவருந்தவும், தங்கிப் படிக்கவும் இங்கு வசதிகள் இருப்பதோடு தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. இந்த மையத்திற்கான புதிய வளாகத்தை 12.14 கோடி ரூபாய் செலவில் மறைந்த முதலவர் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

இங்கு பயின்ற பலர் ஆண்டுதோறும் வெற்றி பெற்று அகில இந்தியப் குடிமைப்பணி அதிகாரிகளாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். தற்போது முதல் நிலைத் தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு (mains) இம்மையத்தில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் இந்த மையத்தில் முதன்மைத் தேர்விற்கு பயிற்சி பெற பதிவுசெய்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். இம்மையத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு குடிமைப் பணி முதன்மை தேர்வு (mains) எழுதும் இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  முதல் நிலை (prelims) முடிவுகள் வெளியிடப்பட்ட இரண்டு தினங்களுக்குள்  www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.

225 பேர் தங்கிப் பயில உண்டு, உறைவிட வசதிகள் இம்மையத்தில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x