Published : 02 Jul 2019 10:00 PM
Last Updated : 02 Jul 2019 10:00 PM

விபத்தில் எல்கேஜி மாணவி உயிரிழந்த பின்னரும் அலட்சியம்: பள்ளி நிர்வாகி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்

2017-ம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ பள்ளி வாகனத்திலிருந்து இறங்கி திரும்பி வாகனத்தின் பின்னால் நின்றுள்ளார். சிறுமி நிற்பதை கவனிக்காமல் வாகனத்தை பின்னால் இயக்கியதால் சிறுமி பலியானார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தாய் அஞ்சலிதேவி புகார் அளித்தார். புகாரில் நடவடிக்கை எடுக்க கோரியும், 25 லட்ச ரூபாய் இழப்பீடு கோரியும் அஞ்சலிதேவி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இணை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவோ, மோட்டார் வாகன சட்டப்படி குழு அமைக்கப்பட்டதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை நீதிபதி ஜெயச்சந்திரன் அறிந்துக்கொண்டார்.

அதேபோல பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதற்கான ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும், வாகன ஓட்டுனர் உரிமத்தை மட்டும் 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதையும் நீதிபதி கண்டறிந்து சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி  பாதுகாப்பு குழு அமைக்காமல் கடமை தவறிய எஸ்.கே.டி.மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை நான்கு மாதங்களில் மனுதாரருக்கு வழங்க நீதிபதி உத்தவிட்டார்.

25 லட்ச ரூபாய் ஒழப்பீடு கோரிக்கை மீது மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x