Published : 10 Jul 2019 03:13 PM
Last Updated : 10 Jul 2019 03:13 PM

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர சோதனை ஓட்ட முறையில், மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து பார்ச்சம்பேட்டை வரை குடிநீர் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.

சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு செல்ல முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த திட்டத்துக்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து 3.5 கி.மீ. தொலைவுள்ள பார்ச்சம் பேட்டை ரயில்வே கேட் வரை குழாய்கள் அமைத்து, அங்கிருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தன.

இதைத் தொடர்ந்து, குழாய்கள் புதைக்கும் பணிகளும், வால்வுகள் பொருத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று தற்போது முடிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து பார்ச்சம் பேட்டை வரை குடிநீர் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் நடை பெற்றது.

சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு நேற்று காலை வந்தடைந்தன. சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ் வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதில், 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் நிரப்பப்படும். அதாவது, ஒரு முறைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து, அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x