Published : 19 Nov 2014 10:48 AM
Last Updated : 19 Nov 2014 10:48 AM

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

ரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப் பட உள்ளதாக மத்திய அரசு ஊழி யர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியை அடிப் படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; 7-வது ஊதியக் குழுவின் இறுதி முடிவுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மத்திய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நாடு முழு வதும் மாநிலத் தலை நகரங்களில் நேற்று தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

“அரசு ஊழியர்களின் அக விலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் 50 சதவீத அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்பது மத்திய அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கையாகும். ஆகவே, ஏற்றுக் கொண்ட கோரிக் கையை அமல்படுத்தக் கோரி இன்று நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஊழியர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதால் இன்று அனைத்துத் துறை ஊழியர்களும் ஓரணியில் திரளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்துடன் இணைந்து போராட முன்வந்துள்ளன.

இந்நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சிறப்பு மாநாடு டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வலிமை நரேந்திர மோடி அரசுக்கு உணர்த்தப்படும்” என்றார் கிருஷ்ணன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் ஜே.ராம மூர்த்தி, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x