Published : 13 Jul 2019 11:30 AM
Last Updated : 13 Jul 2019 11:30 AM

மழை வந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

மழை வந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்ற சிவன், இன்று (சனிக்கிழமை) ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அவருக்கு இணை செயல் அலுவலர்கள் தர்மா ரெட்டி, பாலாஜி ஆகியோர் ரங்கநாத மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவன், ''இஸ்ரோ விண்கலம் திட்டமிட்டபடி ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும். மழை வந்தாலும் பிரச்சினையில்லை.

2 மாதங்களுக்குப் பிறகு நிலவின் தென் திசையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எதிர்பார்த்தபடியே திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும். 2021-ம் ஆண்டு டிசம்பரில் ககன்யான் விண்கலன் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ககன்யானின் மனிதர்களை அனுப்புவதற்கான ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்'' என்று சிவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x