Published : 13 Jul 2019 11:07 AM
Last Updated : 13 Jul 2019 11:07 AM

அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழை ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: ராமதாஸ் விமர்சனம்

அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழை ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் உட்பட பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தபால்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத்தேர்வு இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்துராமன், அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தபால்துறையில் பணியிடங்களை நிரப்ப முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகளில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதன்மை பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். பிற பணியிடங்களுக்கான 2-ம் தாள் தேர்வு ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வு முறையை உடனே அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்!

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்?", என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x