Published : 10 Jul 2019 11:45 AM
Last Updated : 10 Jul 2019 11:45 AM

கழிவு நீர் தொட்டி, மனித கழிவுகளை அகற்றும்போது இறப்புகளில் தமிழகம் முதலிடம்; இதுவரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை ஆகியவற்றை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், இது இன்னும் நடைமுறையில் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பிக்கள் அசாதுதீன் ஓவைசி மற்றும் சையது இம்தியாஸ் ஜலீல் ஆகியோர், துப்புரவு பணியாளர்களின் இறப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இத்தகைய இறப்புகள் குறித்த தகவல்களை அமைச்சகத்திடம் அளித்துள்ள 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 1993 முதல் 620 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 88 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்ததாகவும் தெரிவித்தார். அதில், 445 சம்பவங்களில் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்டதாகவும், 58 சம்பவங்களில் குடும்பங்களுக்கு பகுதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும், 117 சம்பவங்களில் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இத்தகைய இறப்புகள் குறித்த தகவல்களை அமைச்சகத்திடம் அளித்துள்ள 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 144 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, 131 இறப்புகளுடன் குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் பதிவான 88 இறப்புகளில் 52 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என ராம்தாஸ் அத்வாலே தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இத்தகைய இறப்புகளை தடுப்பதற்காக, மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் தடை மற்றும் அவர்களின் புனர்வாழ்வு சட்டம் 2013-ல் திருத்தம் கொண்டு வரப்படுமா என எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அதனை கண்காணிக்க பல்வேறு மட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், திருத்தம் கொண்டு வரப்படாது எனவும் பதிலளித்தார்.

இதுதொடர்பாக 'தி இந்து'விடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், "இந்த இறப்புகள் குறித்து பல மாநிலங்கள் அமைச்சகத்திடம் தகவல்கள் தரவில்லை. 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சில மாநிலங்கள் அத்தகைய இறப்புகள் தங்கள் மாநிலங்களில் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளன", என தெரிவித்தார். இதன்மூலம், அனைத்து மாநிலங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத இறப்புகளை சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த மார்ச் 27, 2014 அன்று, உச்ச நீதிமன்றம், 1993 முதல் இறந்த துப்புரவு பணியாளர்களின் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து விஷ்னு தயால் ராம் எம்.பி எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "டிசம்பர் 6, 2013 முதல் ஜூன் 30, 2019 வரை இந்தியாவில் 53,598 இந்தியாவில் துப்புரவு பணியாளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இத்தகைய துப்புரவு பணிகளில் நியமிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை சட்டத்தில் உள்ளது. எனினும், இதுதொடர்பான வழக்குகளில் இதுவரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை என, அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x