Published : 10 Jul 2019 02:05 PM
Last Updated : 10 Jul 2019 02:05 PM

தமிழக வாழ்வுரிமையை மறுக்கும் திட்டங்களை திரும்பப்பெறக் கோரி வரும் 11-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமையை மறுக்கும் திட்டங்களை திரும்பப்பெறக் கோரி வரும் 11 ஆம் தேதி சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அரசுகளின் ஒன்றியம் என்றுதான் இந்தியாவைக் குறிக்கிறது அரசியலமைப்புச் சட்டம். அரசுகள் என்றால் அவை மொழி வழி தேசிய அரசுகள்! ஆனால் ஒரே தேசம் என்பதாகக் கதை கட்டுகிறது பாஜக. இதை வைத்து தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்னும் வரலாற்றுத் தேசிய விழுமியத்தை அழிக்கப் பார்க்கிறது. இதனைத் தர்மமாக நிலைநாட்ட, கர்ம வினை ஆற்றும்படி பணிக்கப்பட்டவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த அழிப்புக்கான தொடக்கம் மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின்போது போடப்பட்டது. இப்போது செயல்பாட்டில் உள்ளார்.

அந்த அழிவுத் திட்டங்களாவன:

கூடங்குளம் அணுவுலைப் பூங்கா மற்றும் அணுவுலைக் கழிவு மையம், தேனி பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ, காவிரி பாசனப்பகுதியை பெட்ரோலிய மண்டலமாக்கி நாசம் செய்வது, மேற்கு மாவட்ட விளைநிலங்களில் கெயில் குழாய் பதிப்பு மற்றும் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பு, சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை, கடல்தொழிலை காலிசெய்யும் சாகர்மாலா உள்ளிட்ட இன்னும் பல.

சர்வாதிகாரமாக மோடி எடுத்த முடிவுகளாவன:

உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக ஆணையம் உள்ளிட்ட இன்னும் பல.

மேலும், தேசிய புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வியை மறுக்கும், முந்தைய குலக்கல்வித் திட்டத்தை விடவும் மோசமான, மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்திய குருகுலக்கல்வி முறையைக் கொண்டுவருகிறார். அதோடு, ஒரே குடும்ப அட்டை என்று சொல்லி, நாளடைவில் அதை வெறும் அடையாள அட்டையாக்கப் பார்க்கிறார். இந்த இரு திட்டங்களும் கூர்ந்து நோக்கத்தக்கவை. அதாவது, மக்களுக்கு கல்வியையும் உணவையும் மறுக்கும் இத்திட்டங்கள், அறியாமையும் வறுமையும் நீடித்தால்தான் மனிதனை தொடர்ந்து அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்ற சாணக்கியச் சனாதனக் கோட்பாட்டின்படி கொண்டுவரப்படுபவை.

இனி, கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய அரசே நியமிக்கும் என்கிறார். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார் நிறுவனப் பணிகள், ரயில்வேப் பணிகளில் வட இந்தியர்கள், குறிப்பாக இந்திக்காரர்களே நிறைக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணி மற்றும் மின்துறைப் பணிகளிலும் வட மாநிலத்தவர்கள் நுழைக்கப்படுகிறார்கள்.

இப்படி தமிழக வாழ்வுரிமையை மறுக்கும் திட்டங்கள், சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரித்தான் மோடி அரசுக்கு எதிராக, 11.07.2019 வியாழன் காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது", என வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x