Published : 09 Jul 2019 08:29 PM
Last Updated : 09 Jul 2019 08:29 PM

மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை முறைகேடாக விற்க முயற்சி: 2 பேர் கைது லாரி, வேன் 2000 லிட்டர் டீசல் பறிமுதல்

மீனவர்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் டீசலை தனியாருக்கு விற்பனை செய்யும் போது கையுங்களவுமாக போலீஸார் பிடித்தனர். 2000 லிட்டர் டீசல், டேங்கர் லாரி ஓட்டுநர்கள், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, தலைமை காவலர்கள் கணேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனையூர் பகுதியில் ஒரு மினி வேன் ஒன்று சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்தது.

சிலர் மினி வேனில் கேன்களில் இருந்த டீசலை டேங்கர் லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற உதவி ஆய்வாளர் பாலு உள்ளிட்ட ரோந்துப் போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் டீசலை முறைகேடாக விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீஸாரைப் பார்த்ததும் மினிவேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட டேங்கர் லாரி ஓட்டுநர் செல்வராஜ் கிளீனர் விவேக்குமார் இருவரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் மானியத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் டீசலை மீனவர்களிடம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக டீசலை தனியாருக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

நீலாங்கரையில் எடுக்கப்பட்ட டீசல் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கேன்களில் நிரப்பி மினி வேனில்  பனையூர் பகுதிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். மினி வேனிலிருந்து டேங்கர் லாரிக்கு மாற்றி எடுத்துச் செல்வோம். அப்படி மாற்ற முயற்சித்த போதுதான் போலீஸார் தங்களை பிடித்துவிட்டதாக தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.  

பின்னர் செல்வராஜ், விவேக்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கானத்தூர் ஆய்வாளர் ஆனந்தஜோதி இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அரசியல் பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

டீசலை முறைகேடாக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட மினி வேன், டேங்கர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து,  2000 லிட்டர் டீசலையும் கைபற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x