Published : 03 Jul 2019 01:14 PM
Last Updated : 03 Jul 2019 01:14 PM

குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏசியில் தீப்பற்றியது: காயங்களுடன் உயிர் தப்பிய தம்பதி

சென்னையை அடுத்த போரூரில், வீட்டின் ஏசியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, கணவன் - மனைவி இருவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது:

சென்னையை அடுத்த போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரகாஷ் மேனன் (55) மற்றும் அவரது மனைவி (56) இருவரும் வசித்து வருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள ஏசியை ரிமோட்டில் மட்டும் அணைத்துவிட்டு, அதன் சுவிட்ச்-ஐ அணைக்காமல் விட்டுள்ளனர்.

இதையடுத்து, நேற்று நள்ளிரவில் குறைவான மின்னழுத்தம் காரணமாக, ஏசியில் தீப்பிடித்து வீட்டிலுள்ள சோஃபா, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களின் மீதும் தீப்பிடித்தது. இதனால், அந்த அறை முழுவதும் புகைமூட்டமானது.

இதனைக் கண்ட தம்பதியர் பதற்றத்துடன்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், தம்பதியர் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.புகைமூட்டம் காரணமாக அவர்களால் வெளியே வர இயலவில்லை.

அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டார், எஸ்.ஆர்.எம்.சி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து தம்பதியரை மீட்டு தீயை அணைத்தனர்.

இதையடுத்து, விபத்தால் காயங்களுடன் பாதிக்கப்பட்ட தம்பதியர் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம், ஃபிர்ட்ஜில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தனியார் தொலைக்காட்சி நிருபர் தன் மனைவி மற்றும் தாயுடன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x