Published : 01 Jul 2019 07:10 PM
Last Updated : 01 Jul 2019 07:10 PM

நிதித்துறை செயலராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

நிதித்துறை செயலர் சண்முகம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய நிதித்துறை செயலராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுபெற்றதை அடுத்து தமிழக தலைமைச் செயலாளராக நிதித்துறைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் நிதித்துறை செயலர் பதவிக்கு உரிய தகுதியான ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் ஐஏஸ் தற்போது நிதித்துறைச் செயலராக நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் ஐஏஸ் கடந்து வந்த பாதை

1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கிருஷ்ணன் நிதி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர். 1991-92 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றினார். 1996-97 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவன மேலாண்மை இயக்குனராகவும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கழக உறுப்பினர் செயலராகவும் பணியாற்றினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக 97-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டுவரை கிருஷ்ணன் ஐஏஎஸ் பணியாற்றினார். 2000-ம் ஆண்டு நிதித்துறை இணைச்செயலாளராகப் பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு வணிகவரித்துறை இயக்குனராகப் பணியாற்றினார்.

நிதித்துறை செயலராக (செலவீனம்) 2011 முதல் 2013 வரை கிருஷ்ணன் ஐஏஎஸ் பணியாற்றினார். 14-வது நிதி கமிஷன் தலைவராகவும், தமிழகத்தின் 5-வது நிதி கமிஷனிலும் அங்கம் வகித்தார். தமிழக அரசின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

கிருஷ்ணன் ஐஏஎஸ், புதிய திருப்பூர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பையும் வகித்தார். தற்போது வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலராகப் பதவி வகித்து வந்த நிலையில் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற எஸ்.கிருஷ்ணன் அயல் பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தில் உள்ள இந்திய நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் 2007 முதல் 2010-ம் ஆண்டுவரை மூத்த ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச சந்தை பிரச்சினை உருவானபோது அதைத்தீர்வு காணும் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜி 20 மாநாட்டில், சர்வதேச நிதி கட்டமைப்பு மற்றும் உலகளாவிய நிதி பாதுகாப்பில்  இந்திய அரசின் பிரதிநிதியாக இவர் இடம் பெற்றிருந்தார்.

2004 முதல் 2007-ம் ஆண்டுவரை மத்திய நிதி அமைச்சகத்தின் தனிச் செயலாளராகப் பணியாற்றினார். 2000 முதல் 2004-ம் ஆண்டுவரை மிசவுரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் ( ஐஏஎஸ் பயிற்சி அகாடமி) துணை இயக்குநராகவும் கிருஷ்ணன் ஐஏஎஸ் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x