Published : 08 Jul 2019 12:12 PM
Last Updated : 08 Jul 2019 12:12 PM

கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் நீதிமன்றத்தில் புதிய மனு

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் தரப்பில்,  நரம்பு மண்டல நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சரணடைய இயலாது என்றும்  உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரவணபவன் ராஜ கோபால், தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக அடைய நினைத்து, ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகார் பதிவானது இந்த வழக் கில் சிக்கிய ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2004-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2009-ம் ஆண்டு, ‘‘குற்றவாளிகளுக்கு கொலைக் குற்றத்தை கருத்தில்கொண்டு தண்டனை வழங்காமல், கீழமை நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டது. இந்த வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கள் தெளிவான நோக்கத் துடன் பயங்கர குற்றம் இழைத்துள்ளனர். இது மன்னிக்க முடியாத குற்றம்’’ எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட ராஜ கோபால் மற்றும் பட்டுராஜன், ஜனார்த்தன், டேனியல், தமிழ் என்ற தமிழ்ச் செல்வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ கோபால் ஜுலை 7-ம் தேதிக் குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கெடு விதித்து இருந்தது. அதன்படி, நேற்று ராஜகோபால் சரண் அடைந்து இருக்க வேண்டும். ஆனால், அவர் நேற்று சரண் அடையவில்லை.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீதிமன்றம் செயல்படவில்லை என்றும், 71 வயதாகும் ராஜகோபாலுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் நேற்று சரண் அடையவில்லை என்றும் கூறப்பட்டது. இன்று (திங்கள் கிழமை) பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரவணபவன் ராஜகோபால் சரண் அடைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இன்றும் அவர் சரணடையவில்லை.

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இன்று சரணடைய முடியாது என்று ராஜகோபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நரம்பு மண்டல நோயால், ராஜகோபால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சரணடைய இயலாது என்றும் ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x