Published : 11 Nov 2014 01:03 PM
Last Updated : 11 Nov 2014 01:03 PM

முதல்வர் என அழைத்துக்கொள்ள வெட்கப்படுகிறார் பன்னீர்செல்வம்: மு.க.ஸ்டாலின் சாடல்

ஐந்து மீனவர்கள் தூக்கு விவகாரத்தில் சட்டப் பேரவையைக் கூட்டச் சொல்வதே தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் என்று அழைத்துக்கொள்ளவே வெட்கப்படுவதாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " "பினாமி" முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 7-11-2014 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில், கழகத் தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன, மாநிலத்திற்குப் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்களில் நடைபெறும் குளிர்காலச் சட்டமன்றக் கூட்டத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை நீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதால், அவர்களது உயிர்களைக் காப்பாற்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் தமழக மக்களைப் பெரிதும் பாதிக்கும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளையும் விவாதிக்க வேண்டியிருப்பதால் சட்டப் பேரவையினைக் கூட்ட வேண்டுமென்று கோரிக்கையைத் தெரிவித்திருந்தேன்.

"பினாமி" பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிற போது முக்கியமான எதிர்க்கட்சி, தமிழகச் சட்டப் பேரவையைக் கூட்டச் சொல்லிக் கேட்டுக் கொள்கிற அளவுக்கா இங்கே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது? ஜனநாயக ஆட்சியில் தானே சட்டமன்றம், பேரவைக் கூட்டம், அங்கே ஆரோக்கியமான விவாதம், பதில் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறலாம். அதையெல்லாம் தற்போது அதிமுக வின் தனி நபர் சர்வாதிகாரத்தில், பினாமி ஆட்சியிலே எதிர்பார்க்கலாமா என்ற வகையில் தான் பன்னீர் செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும், சட்டசபையைக் கூட்ட ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை என்றும் மிகுந்த ஆணவத்தோடும், ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிறதென்ற தலைக்கனத்தோடும் அறிக்கை விடுத்திருக்கிறார்.

ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டுமென்றும், விவாதிக்க வேண்டுமென்றும் இதற்கு முன்பு எத்தனையோ முறை எதிர்க் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. சட்டப்பேரவை ஒன்றும் "கொடநாடு எஸ்டேட்" மற்றும் சிறுதாவூர் அரண்மனை போல தனி நபர் சொத்தல்ல; அ.தி.மு.க.வுக்கு மட்டும் பட்டா பாத்தியமுள்ள இடமுமல்ல.

அது தமிழக மக்களின் பொதுச் சொத்து; பேரவையில் அங்கம் வகித்திடும் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து.

மேலும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையில் தற்போது இலங்கையிலே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையெல்லாம் விளக்கியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி முடிவுற்று, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 28-11-2011 அன்று இந்த ஐந்து மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையிலே கடந்த மூன்றாண்டு காலமாக வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கும், வழக்கிற்கும் அரசு நிதியைக் கொடுத்தார்களே தவிர, இந்த மூன்றாண்டு காலத்தில் அவர்களை விடுவிக்க முடிந்ததா? அரசுப் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டால், அவர்கள் திரும்பி வந்து விடுவார்களா?

அந்த ஐந்து மீனவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள் அல்லவா?

அதைப் பற்றியெல்லாம் விவாதிக்கச் சட்டப் பேரவையைக் கூட்டுங்கள்; இந்தப் பிரச்சினையில் தமிழகமே ஒன்றிணைந்து ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வாய்ப்பு ஏற்படும் என்றால், சட்டசபையைக் கூட்ட ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை என்று அறிக்கை விடுவதா ஒரு முதல்வருக்கான கண்ணியம்?

சட்டப் பேரவையைக் கூட்டுமாறு கேட்டுக் கொள்வது, பன்னீர்செல்வத்தின் "அம்மா" அகராதிப்படி "குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கின்ற செயலா? தி.மு.கழகத்தின் சட்டப்பேரவை கழகக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு உரிமை இல்லையா?

2009ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றக் கூட்டத் தொடர் 21-7-2009 அன்று தான் முடிவுற்றது என்றும், அடுத்த கூட்டத் தொடர் 6-1-2010 அன்று தான் கூட்டப்பட்டது என்றும் பன்னீர்செல்வம் அறிக்கையிலே கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் இப்போது ஏற்பட்டிருப்பதைப் போல அத்தியாவசியமான பிரச்சினைகள் ஏற்படவில்லை, எனவே அப்போது கூட்டப்படவில்லை; ஆனால் தற்போது எத்தனை குழப்பங்கள்? கொலை, கொள்ளை நடக்காத நாள் உண்டா?

ஏன் பழைய முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்காளானதால் முதல்வரே மாறியுள்ள நிலையில், புதிய அமைச்சரவையும் அமைந்ததற்குப் பிறகு சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டுமா? வேண்டாமா?

மேலும் பன்னீர்செல்வம், ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருத்தல் வேண்டுமென்றும் பேரவைச் செயலாளர் குறித்துக் கொடுத்தபடி பேரவை விதியைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்குள் கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். அதைத் தான் நானும் கேட்டேன். அப்படிக் கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லை என்று சொல்வது, என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் குரலை நெரிப்பதற்குச் சமம்; மக்களாட்சியின் மாண்பையே காலில் போட்டு மிதித்திடும்செயல்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் 3-ன்படி, பேரவையை ஆளுநர்தான் கூட்ட வேண்டும். அரசின் சார்பில் ஆளுநருக்கு கூட்டத்தை எப்போது கூட்டவேண்டுமென்று பரிந்துரை செய்யலாம். மேலும் பேரவை விதிகள் 55 மற்றும் 56-ன்படி பேரவை நடைபெறும்போது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஒரு உறுப்பினர் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு உரிமை உண்டு என்கிற போது, ஒரு உறுப்பினர் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதற்காக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று கேட்கும்போது, முதல்வர் பொறுப்பிலே இருப்பவர், உறுப்பினர் ஆலோசனை கூற வேண்டாம் என்று பதில் அளிப்பது அவை உரிமை மீறல் நடவடிக்கையா இல்லையா என்பதை பேரவை விதிகளை இனியாவது பினாமி முதல்வர் பன்னீர்செல்வம் படித்துப் பார்த்து தெளிவு பெற வேண்டும்.

ஓ. பன்னீர்செல்வம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, 2002 மார்ச் 1ஆம் தேதி வரை பொறுப்பிலே இருந்த போது, சட்டப் பேரவையை ஒரு முறையாவது கூட்டியது உண்டா? பொதுவாக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் மாறி, வேறொருவர் முதல்வர் பதவிக்கு வருகின்ற போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கூட்டி, மாறுதலுக்கான தன்னிலை விளக்கத்தை அளித்து, நாட்டிலே நிலவும் அவசர முக்கியத்துவமான பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டியது ஜனநாயக நாட்டிலே கடமையா இல்லையா என்பதை பன்னீர்செல்வம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே தி.மு.க. விலே தந்தைக்கும், தனயனுக்கும் பனிப்போர் என்றெல்லாம் அந்தக் கட்சியிலே உள்ள நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல, தான் தற்போது முதல்வர் என்ற தற்காலிகத் தகுதியைக் கூட மறந்து விட்டு என்னைக் கிண்டல் செய்திருக்கிறார். பன்னீர்செல்வம் போன்றவர்கள் இப்படியெல்லாம் பிரச்சினைகளைக் கிளப்பி, சில வார ஏடுகளின் துணையோடு கழகத்தில் குழப்பம் விளைவிக்க முயலுவதை அறிந்து தான், நானே திட்டவட்டமாக தலைவர் கருணாநிதிதான் 2016ஆம் ஆண்டு தேர்தலில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக எங்களையெல்லாம் வழி நடத்துவார் என்று தெரிவித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் என்றுமே தந்தைக்குக் கட்டுப்பட்ட தனயன்; தலைவரின் கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தொண்டன் - என்பதை என்னுடைய கட்சித் தோழர்களும், பொது மக்களும் நன்கறிவார்கள். எனவே பன்னீர்செல்வம் போன்ற கோணல் புத்திக்காரர்கள் குடும்பத்திற்குள் தந்தை, தனயன் என்றெல்லாம் கூறி குழப்பம் விளைவிக்க நினைத்தால், அது "ஆப்பசைத்த" நிலைக்குத் தான் ஆளாக நேரிடும்.

தற்போது அங்கே வகிக்கும் தற்காலிக முதல்வர் பதவிக்கே "மன்னார்குடி" குடும்பத்தினரால் எப்போது இடைஞ்சல் வருமோ; அவர்களால் ஏற்பட்ட "பனிப்போர்" எப்போது முடியுமோ என்று தூக்கம் வராமல் புரண்டுப் புலம்பிக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வத்திற்கு இப்படி அறிக்கை விடுவது வெட்கக்கேடு அல்லவா? அல்லது எங்கோ ஒரு தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கையிலே அப்படியே கையெழுத்திட வேண்டிய கொடுமை அவமானம் இல்லையா?

மேலும் பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பேரவையில் நடந்து கொண்ட முறையை நாடகம் என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார். பன்னீர்செல்வம், நீங்கள் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள், இன்னும் அரசு அலுவலகங்களில் உங்கள் புகைப்படம் கூட இடம் பெறவில்லை, உங்களை ஐ.ஏ.எஸ். அதகாரிகளும் மற்ற மூத்த அலுவலர்களும் முதலமைச்சராகவே கருதவில்லை; உங்கள் அறை வாசலில் முதல் அமைச்சரின் அறை என்று கூட பலகை மாட்டப்பட்டதாகச் செய்தி இல்லை. முதல்வர் என்று அழைத்துக்கொள்ளக் கூட வெட்கப்படுகிறீர்கள்.

இந்த நிலையில் இப்படியெல்லாம் அறிக்கை விடுவது உங்கள் பதவிக்கு உகந்ததல்ல. தமிழக மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கப் பேரவையைக் கூட்டுங்கள், அல்லது கூட்டாமல் இருங்கள். உங்களுடைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி, தமிழ்நாட்டு மக்கள் தக்க நேரத்தில் முடிவுக்கு வருவார்கள். ஆனால் "ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை" என்று சர்வாதிகாரப் பாணியில் எடுத்தெறிந்து பேச முற்படுவது "பன்னீர்செல்வம்" என்ற பெயருக்குப் பெரும் இழுக்கைத் தேடிக் கொடுத்து விடும்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x