Last Updated : 02 Jul, 2019 04:46 PM

 

Published : 02 Jul 2019 04:46 PM
Last Updated : 02 Jul 2019 04:46 PM

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்: தொழிலாளர்கள் அதிர்ச்சி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பதில்களை அளித்துள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உட்பட 7 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இதில் 2,254 உபரி பேருந்துகள் உட்பட 21,744 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 1,37,408 பணியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், முறையாக ஓய்வூதியப் பணப்பலன், ஓய்வூதியம் வழங்கவில்லை என 2 ஆண்டுகளுக்கு முன், பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.     

ஆனால், போராடியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்ததால் போரட்டத்தை கைவிட்டனர்.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்த பிரடரிக் எங்கல்ஸ், அரசு போக்குவரத்து கழகங்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பணியாளர்களின் ஓய்வூதியம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.

அதில் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்திய பின் (2003 ஏப். 1-க்கு பின்) பணியில் சேர்ந்த நிரந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2019 பிப்ரவரி மாதம் வரை தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பங்குத் தொகை எவ்வளவு? அதனை முதலீடு செய்த விபரம், 2003 ஏப்.1-க்கு பின் ஓய்வு பெற்றோர், இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஓய்வுப் பெற்றோர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய விபரம் போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அதன்படி 2003 ஏப்.1-க்கு பின் ஒருசில கழகங்களைத் தவிர பெரும்பாலான போக்குவரத்துக் கழகங்கள் வெவ்வேறு பதில்களை அளித்துள்ளன. 

அரசு போக்குவரத்துக் கழகம் விருதுநகர் மண்டலத்தில் நிரந்த பணியாளர்களே நியமிக்கப்படவில்லை என பதில் அளித்துள்ளது. மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

அதேபோல் சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் கும்பகோணம், நாகபட்டினம், சேலம் மண்டலங்களிலும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. புதிய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்திய பின் (2003 ஏப். 1-க்கு பின்) மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், நாகபட்டினம், சேலம் மண்டலம் மற்றும் சென்னை மாநகர் அரசு போக்குவரத்து கழகங்களில்  47,407 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.996.56 கோடி ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த போக்குவரத்து கழகங்களில் 595 பேர் இறந்துள்ளனர். 213 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இறந்தோரின் குடும்பத்திற்கோ, ஓய்வுப் பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என பதில் தரப்பட்டுள்ளன.

சில கழகங்கள் வங்கிகளிலும், சில கழங்கள் நிர்வாக கணக்கிலும் ஓய்வூதியத்திற்காக பிடித்த தொகையை பராமரித்து வருகின்றன. ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் வெவ்வேறு பதில் அளித்துள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழக சிஐடியு பொதுச் செயலாளர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: விருதுநகர் மண்டலத்தில் நிரந்தர பணியாளர்களே நியமிக்கவில்லை என பதிலளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே மாதிரியாக தொழிலாளர்கள் சட்டங்கள் இருந்தும் ஒவ்வொரு போக்குரவத்து கழகத்திலும் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதனால் ஓய்வூதியம் வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. ஓய்வூதியம் பெற முடியாமல் இறந்த பணியாளர்களின் குடும்பங்கள், ஓய்வுப் பெற்றோர் சிரமப்படுகின்றனர்.   

இதற்காகப் போராடினாலும் அரசு கண்டுகொள்வதில்லை என்றார்.   

 இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x