Published : 13 Jul 2019 02:31 PM
Last Updated : 13 Jul 2019 02:31 PM

இந்தி பேசாத மாநிலத்தவர்கள் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்படும்: தினகரன் கண்டனம்

இந்திய அஞ்சல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் உட்பட பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தபால்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத்தேர்வு இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்துராமன், அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தபால்துறையில் பணியிடங்களை நிரப்ப முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகளில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதன்மை பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். பிற பணியிடங்களுக்கான 2-ம் தாள் தேர்வு ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வு முறையை உடனே அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அஞ்சல்துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல்துறை வேலைவாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x