Published : 02 Jul 2019 12:45 PM
Last Updated : 02 Jul 2019 12:45 PM

பதற்றத்திலேயே இருக்கிறார் தினகரன்; தொண்டர்களின் முதல்வர் ஈபிஎஸ்- இசக்கி சுப்பையா விமர்சனம்

டிடிவி தினகரன் பதற்றத்திலேயே இருப்பதாகவும் தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்வதாகவும் அமமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை -6ம் தேதி அதிமுகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:

''2009-ல் என்னை அடையாளம் காட்டிய இயக்கம் அதிமுக. 2011-ல் அம்பாசமுத்திரம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றேன். எந்தக்கூட்டத்திலும் பொதுமேடையிலும் யாரையும் நான் குறைத்துப் பேசமாட்டேன்.

டிடிவி தினகரன் மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்லவரவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. 2011-ல் நான் 48 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என்பதைக் கிண்டல் செய்யும் விதமாக ஒரு மண்டலம் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என்றார் டிடிவி தினகரன்.

அதேபோல என்னை, பாதாள சாக்கடை காண்ட்ராக்டர் என்றார். என் பரம்பரையே காண்ட்ராக்டர் தொழில்தான் செய்கிறது. அவர் அளித்த பேட்டியால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது.

என்னால்தான் இசக்கி அடையாளம் காட்டப்பட்டார் என்றும் தினகரன் பேசினார். 2009-ல் அவர் அதிமுகவிலேயே இல்லை. டிடிவி தினகரன் ஏன் தடுமாறிக்கொண்டே, பதற்றத்துடன் பேசுகிறார் என்று தெரியவில்லை. சுயலாபம் பார்த்திருந்தால் நான் அமமுகவுக்கு வந்திருக்கவே மாட்டேன்.

தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். டிடிவி தொண்டர்களின் அடையாளமாக மட்டுமே இருக்கிறார். அமமுக இயக்கத்தில் உள்ள தொண்டர்களும் சகோதரர்களும் தாய்க்கழகத்தில் இணையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி தாய்க்கழகத்தில் இணைய உள்ளோம்.

முதல்வரும் துணை முதல்வரும் பெருந்தன்மையோடு நீங்கள் இங்கே வரவேண்டாம் நாங்கள் அங்கே வருகிறோம் என்றனர். ஜூலை 6-ம் தேதி தென்காசியில் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைய உள்ளோம்''.

இவ்வாறு பேசினார் இசக்கி சுப்பையா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x