Published : 02 Jul 2019 08:47 AM
Last Updated : 02 Jul 2019 08:47 AM

பாஸ்போர்ட் வாங்கறது ரொம்ப சுலபம்!- தேசிய விருது பெற்ற அதிகாரி சிவக்குமார்

இப்போதெல்லாம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை மிக எளிதாக்கிவிட்டார்கள். தேவையற்ற பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை" என்கிறார் கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜி.சிவக்குமார்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கான தேசிய கருத்தரங்கில், சிறந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கான விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வழங்கினார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். ஏற்கெனவே 5 முறை தேசிய அளவில் சிறந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கான விருதைப் பெற்றுள்ள நிலையில், 6-வது முறையாக 2018-2019-ம் நிதியாண்டிலும் விருதைப் பெற்றுள்ளது கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டிருந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜி.சிவக்குமார், இடையில் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

"சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் 6-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2, 3 ஆண்டுகளில் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. 1989-க்கு முன் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை என வெளியுறவுத் துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

கோவை மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில்,

குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோல 412 அஞ்சல் நிலையங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைந்துள்ளன. ஏறத்தாழ 20 சதவீத பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், இந்த சேவா மையங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தும், எந்த மையத்துக்கு பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாஸ்போர்ட் அலுவலகத்துக்குள் நுழைந்து, விண்ணப்ப நடைமுறைகளை முடித்துச் செல்வதற்கான நேர அளவு, தேசிய அளவில் ஒரு மணி நேரமாக உள்ளது. அதேசமயம், கோவையில் உள்ள  பாஸ்போர்ட் அலுவலகத்தில்  20 முதல் 25 நிமிடங்களில் நடைமுறைகளை முடித்துக்கொண்டு, புறப்பட்டுச் சென்றுவிடலாம்.

காவல் துறை சரிபார்ப்புக்கான கால அளவைப் பொறுத்தவரை, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள்தான் முன்னிலையில் உள்ளன. கோவை மண்டலத்தில் நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்களில் காவல் துறை சரிபார்ப்பு (போலீஸ் வெரிஃபிகேஷன்) முடிந்துவிடுகிறது. கோவை நகரில் 8 நாட்கள், புறநகரில் 8, நாமக்கல் 6, சேலம் நகரம், புறநகரம், ஈரோடு 7, திருப்பூர் நகரம் 13, திருப்பூர் ஊரகம் 7 நாட்களில்  காவல் துறை சரிபார்ப்பு முடிந்துவிடுகிறது. இந்த கால அளவைக் குறைக்கும் வகையில், காவல் நிலையங்களுக்கு `டேப்லட்' உபகரணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம். காவல் துறை சரிபார்ப்பில் 2 முதல் 3 சதவீதம் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது, குடியுரிமை இல்லாதது  உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கடந்த 2009-ல் கோவை மண்டலத்தில் 73,335 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்ட நிலையில், 2018-19ம் நிதியாண்டில் 1,81,684 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் 54 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. தட்கல் முறையில் 3 நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுவிடலாம். சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற ரூ.1,500, தட்கல் முறைக்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண முறையில் 60 வயதைக் கடந்த முதியோருக்கு 15 சதவீதமும், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 10 சதவீதமும் கட்டண சலுகை  வழங்கப்படுகிறது. போலி பாஸ்போர்ட் பிரச்சினைகள் கோவை மண்டலத்தில் எதுவுமில்லை. அதேபோல, பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்களை முடக்கி வைப்பதும், பெரிய அளவுக்கு கிடையாது" என்றார் ஜி.சிவக்குமார்.

பாஸ்போர்ட்டுக்குள் மைக்ரோ சிப்!

"மத்திய வெளியுறவுத் துறை பாஸ்போர்ட் வழங்குவதில் ஒரு புதிய முறையை அமல்படுத்த உள்ளது. அதன் பெயர் இ-பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டுக்குள் ஒரு சிறிய சிப் (மைக்ரோ சிப்) வைக்கப்படும். அதில், பாஸ்போர்ட்தாரரின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். விமானநிலையத்தில் அதை பரிசோதிக்கும்போது, அனைத்து விவரங்களும் கணினித் திரையில் தெரிந்துவிடும்.  இதில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது.

இந்த திட்டம் இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும். கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்படும். மேற்கத்திய நாடுகளில் ஏற்கெனவே மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்கள் நடைமுறையில் உள்ளன. விமானநிலைய இமிக்ரேசன் கவுண்டரில் இதற்கென பிரத்தியேக இயந்திரம் நிறுவ வேண்டும். பாஸ்போர்ட்தாரர் 30 முறை வெளிநாடுகளுக்குச் செல்லும் தகவல்கள் அனைத்தும் பதிவாகியிருக்கும். 2013-14-ல் வழங்கப்பட்ட சில பாஸ்போர்ட்கள் சேதமடைந்ததாக எழுந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுவிட்டன" என்றார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜி.சிவக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x