Published : 29 Jun 2019 04:59 PM
Last Updated : 29 Jun 2019 04:59 PM

அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக ஒபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக செய்திதொடர்பாளர்கள் ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ பேட்டியோ பதிவோ அளிக்கக்கூடாது என விதித்த தடையை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் மக்களவை தேர்தல் தோல்விக்குப்பின் பொதுக்குழு கூடவிருந்த நிலையில் ராஜன் செல்லப்பா திடீரென அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தார். இதை சில எம்.எல்.ஏக்கள் ஆதரித்து ஊடகங்களில் பேட்டி அளித்தனர்.

இதனால் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறியது. எடப்பாடியை பொதுச்செயலாளராக்க வேண்டும் என சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து அதிமுக செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களில் பேட்டி அளிப்பதோ, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வதோ கூடாது என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக தடைவிதித்தனர்.

இந்நிலையில் இன்று இருவரும் அந்த தடையை நீக்கி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பு வருமாறு:

“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கட்சியின் தலைமை கழகத்தில் இருந்து மறுஅறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகைகளிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம், என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 1 முதல் தங்களுடைய பணியை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”

இவ்வாறு ஒபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய வழக்கறிஞர் சசிரேகா அதிமுக செய்தி தொடர்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x