Published : 05 Aug 2017 09:50 AM
Last Updated : 05 Aug 2017 09:50 AM

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கு: கோவை இளைஞர்கள் 2 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கு தொடர்பாக கோவை இளைஞர்கள் 2 பேரிடம், கேரள மாநிலம் கொச்சியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். இயக்கத்துக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை சேர்க்க முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, கேரள மாநிலம் கண்ணூரில் 2016 அக்டோபர் 2-ம் தேதி 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதில், கோவையை சேர்ந்த அபுபஷர் (எ) ரஷீத்தும் ஒருவர். அவர் அளித்த தகவலின்பேரில், நெல்லை, சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

இது தொடர்பான வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, என்.ஐ.ஏ. கொச்சி பிரிவு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளம் வழியாக, ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர் குறித்தும் விசாரிக்கின்றனர்.

முகநூலில் ஆதரவு பதிவு

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா (27), ஜி.எம். நகரை சேர்ந்த அப்துல்ரகுமான் (24) ஆகியோர் முகநூலில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான தகவல்களை வெளியிட்டுவருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலக கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சவுகத் அலி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்து, அப்துல்லா, அப்துல்ரகுமான் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண் டனர்.

லேப்டாப் பறிமுதல்

கரும்புக்கடை பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்திவரும் முகமது அப்துல்லா வீட்டிலிருந்து, ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜாகீர்நாயக் தொடர்பான டிவிடி, மதப் பிரசங்கம் தொடர்பான டிவிடி-க்கள், லேப்டாப், செல்போன், சிம்கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதேபோல, அப்துல்ரகுமான் வீட்டிலிருந்து சில டிவிடி-க்கள், செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களது நண்பர்களான போத்தனூர் நவ்பல், கரும்புக்கடை அப்துல்ஹசன் ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் 4 பேரையும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், நள்ளிரவில் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது, முகமது அப்துல்லா, அப்துல் ரகுமான் கொச்சியில் உள்ள ஐ.என்.ஏ. அலுவலகத்தில் உடனடியாக ஆஜராக வேண்டுமென சம்மன் அளித்தனர். இதையடுத்து, இருவரும் கொச்சின் சென்றனர்.

மூளைச் சலவை

இது தொடர்பாக ஐ.என்.ஏ. அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கண்ணனூரில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, சஜீல் மங்களாச்சேரி என்பவர் கேரளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுவிட்டதாகவும், அங்கிருந்தபடி கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஆன்லைன் மூலம் தொடர்புகொண்டு, அவர்களை மூளைச் சலவை செய்து, ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிடுவோர் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டோம்.

அதன்படி, கோவையில் சோதனை மேற்கொண்டோம். மேலும், பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x