Published : 19 Aug 2017 10:14 AM
Last Updated : 19 Aug 2017 10:14 AM

தனியார் காவலாளிகள் படிப்படியாக குறைப்பு: போலீஸ் வளையத்துக்குள் போயஸ் கார்டன் - சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் வெளியேறினர்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் வெளியேறியுள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் காவலாளிகளும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வளையத்துக்குள் போயஸ் கார்டன் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள (வேதா நிலையம்) தனது வீட்டில் வசித்து வந்தார். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி மற்றும் உதவியாளர்களும் இருந்தனர்.

ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல் ஆணையர் உத்தரவு

இந்நிலையில், ‘ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்’ என முதல்வர் கே.பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போயஸ் கார்டனைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். வேதா நிலையத்துக்கு செல்லும் 5 சாலை சந்திப்புகளிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘முதல்வரின் அறிவிப்பு குறித்து போயஸ் தோட்டத்தில் இருந்த உதவியாளர்கள், சமையலர்களிடம் தெரிவித்தோம். இதைத் தொடர்ந்து அவர்கள் படிப்படியாக வெளியேறிவிட்டனர். தனியார் காவலர்களும் விரைவில் அப்புறப்படுத்தப்படுவர். போயஸ் கார்டன் வீட்டுக்கு முதல்வர் பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் வேதா நிலையம் வர வாய்ப்பு உள்ளது. அப்போது, ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x