Last Updated : 30 Aug, 2017 09:26 AM

 

Published : 30 Aug 2017 09:26 AM
Last Updated : 30 Aug 2017 09:26 AM

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் மாற்றுப் பணி: விண்ணப்பம் பெறுவது தொடக்கம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களில், மாற்றுப் பணி வழங்கப்பட உள்ளது. இதற்காக டாஸ்மாக் ஊழியர்களிடம் விண்ணப்பங்களை வாங்கும் பணியை தொடங்கியுள்ளது டாஸ்மாக் நிறுவனம்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் நெடுஞ்சாலைகள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டதால், வேலையிழந்த டாஸ்மாக் ஊழியர்கள் அரசின் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, மூடப்பட்ட கடைகளில் 1,183 டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றி திறக்கப்பட்டு, அந்தந்தக் கடைகளில் ஏற்கெனவே பணியாற்றியவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பின்னர், வேலையிழந்த ஊழியர்கள் அனைவரும் செயல்பாட்டில் இருந்து வரும் டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதனால், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

3,300 காலியிடங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,300-க்கும் அதிகமான விற்பனையாளர், உதவியாளர் பணியிடங்களில், கல்வித் தகுதி அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட உள்ளது. இதற்காக டாஸ்மாக் ஊழியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது டாஸ்மாக் நிர்வாகம்.

அதன்படி, டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரிடமும், கூட்டுறவுத் துறை ரேஷன் கடையில் வேலை செய்ய சம்மதமா?, இல்லையா? என்று விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும், ரேஷன் கடைகளில் வேலை செய்ய ஒப்புக்கொள்ளும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விகிதம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமுறை ஊதியம் தேவை

இதுதொடர்பாக ஏஐடியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தனசேகரன் கூறியது: அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பணியாற்ற சம்மதம் தெரிவிப்போரை முதல் ஓராண்டுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்துவது சரியல்ல. பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், மாத ஊதியம் ரூ.10,000 என்ற அளவிலேயே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, அரசுத் துறைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதால், அவற்றில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். பணி மூப்பு, கல்வித் தகுதியுடன், இதுவரை பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண் டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x