Published : 24 Aug 2017 09:57 AM
Last Updated : 24 Aug 2017 09:57 AM

உ.வே.சா நூலகத்தின் பவளவிழாவை முன்னிட்டு பத்துப்பாட்டு நூலின் 4-வது பதிப்பு வெளியீடு

தமிழ்த் தாத்தா உவே.சாமிநாத ஐயர் நூலகத்தின் பவளவிழாவை முன்னிட்டு 42 ஆண்டுகளுக்குப் பிறகு பத்துப்பாட்டு நூலின் 4-வது பதிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை, உ.வே.சாமி நாத ஐயர் நூலகம் சார்பில் பத்துப்பாட்டு நூலின் 4-வது பதிப்பு வெளியீட்டு விழா மற்றும் பத்துப்பாட்டு சிறப்பு கருத்தரங்க தொடக்க விழா சென்னை பல்கலைக்கழக மெரினா வளாக பவளவிழா அரங்கில் நேற்று நடைபெற்றது. உவேசா நூலகத்தின் பவளவிழாவையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் பத்துப்பாட்டு நூலின் 4-வது பதிப்பை உவேசா நூலகத்தின் தலைவரும், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் வெளியிட, முதல் பிரதியை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேசியதாவது:

தமிழ்மொழி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் சென்னை பல் கலைக்கழகம் உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழ் பேரகராதி திட்டத்துக்கும் பலமொழி அகராதி திட்டத்துக்கும் பல் கலைக்கழகம் சார்பில் பெரிய அளவில் நிதியுதவி அளிக்கப்பட்டது. இன்றைய தினம் தமிழ் மொழி உலக அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடிப்படை காரணம் உவேசாதான். ஓலைச் சுவடிகள் வடிவில் இருந்த சங்க கால இலக்கியங்களைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தவர் உவேசா. அவருக்கும் சென்னை பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1927-ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது சென்னை பல்கலைக்கழகம், அவரது 89-வது பிறந்தநாள் விழாவையும் கொண்டாடி மகிழ்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, “உவேசா ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தார். பத்துப்பாட்டு நூலின் 4-வது பதிப்பு வெளிவர உதவி செய்த தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டுக்கள். பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள நூல்களை எளிமைப்படுத்தித் தனித்தனி நூலாக வெளியிட வேண்டும். இதற்கான செலவுகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், நூலகத்தின் பொருளாளருமான ஏ.எம்.சுவாமிநாதன் பேசும்போது, “பத்துப்பாட்டு நூல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நூலகத்தின் செயலாளரும், இந்திய தொல்லியல்துறை முன்னாள் கண்காணிப்பாளருமான தி.சத்தியமூர்த்தி பேசும்போது, “ஆதிச்சநல்லூர் இந்திய தொல்லியல்துறை தொடர்பான ‘என்சைக்ளோபீடியா ஆப் இண்டியன் ஆர்க்கியாலஜி’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் வெளியிட சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நூல் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

உவேசா நூலக துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்,தமிழ்மொழித்துறை தலைவர் பேராசிரியர் ஒய்.மணிகண்டன், உவேசா நூலக காப்பாட்சியர் கோ.உத்திராடம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x