Published : 27 Aug 2017 13:23 pm

Updated : 27 Aug 2017 13:23 pm

 

Published : 27 Aug 2017 01:23 PM
Last Updated : 27 Aug 2017 01:23 PM

அண்ணா நூலகத்துக்கு ரூ.5 கோடியில் புதிய புத்தகங்கள்: தகவல் அறிந்துகொள்ள ஆன்லைனில் புதிய வசதி

5

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு விரைவில் ரூ.5 கோடி செலவில் புதிய புத்தகங்கள் வாங்கப்பட உள்ளன. நாம் தேடும் புத்தகம் நூலகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பதை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அறிந்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தகப் பிரியரான தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் ரூ.170 கோடி செலவில் பிரம்மாண்டமான நூலகம் நிறுவப்பட்டது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த நூலகத்தைத் திறந்துவைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் 8 மாடி கட்டிடத்துடன் அதிநவீன வசதிகளுடன் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் போன்று கம்பீரமாக நிற்கிறது இந்த நூலகம். ஆசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகம் என்ற சிறப்பு மட்டுமின்றி உலக இணைய மின்நூலகம், யுனெஸ்கோ மின்நூலகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள நூலகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த நூலகத்தில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

நூலக அமைப்பு

நூலகக் கட்டிடத்தின் தரை தளத்தில் போட்டித்தேர்வு பிரிவு, முதல் மாடியில் பருவ இதழ்கள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு, 2-வது மாடியில் தமிழ் நூல்கள், 3-வது மாடியில் கணினி அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், அறநூல்கள், அரசியல் நூல்கள், 4-வது மாடியில் பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம் தொடர்பான நூல்கள், 5-வது மாடியில் பொது அறிவு, கணிதம், வானவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியமைப்பியல், மருத்துவம் தொடர்பான நூல்கள், 6-வது மாடியில் பொறியியல் வேளாண்மை, உணவியல், திரைப்படம், விளையாட்டு, மேலாண்மை நூல்கள், 7-வது மாடியில் வரலாறு, புவியியல், சுற்றுலா மற்றும் மேலாண்மை, வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் என்று ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட பிரிவுப் புத்தகங்களை படிக்கலாம். தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்த நூலகத்தில் சராசரியாக தினமும் 1,200 பேர் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் வாசகர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொட்டுவிடுகிறது. வாசகர்களில் பெரும்பாலானோர் சிவில் சர்வீஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்கள்தான்.

பராமரிப்பின்மை

இவ்வளவு சிறப்புகள் கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், கருணாநிதியால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உரிய பராமரிப்பு இன்றி கிடந்தது. நூலக கலையரங்கம் திருமண நிகழ்ச்சி நடத்த வாடகைக்கு விடப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இழந்தது. இதனால், கொதித்தெழுந்த திமுகவினர் அண்ணா நூலகம் அரசியல் காரணங்களால் பராமரிக்கப்படாமல் இருப்பதாகக்கூறி உயர் நீதி்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, நிலைமையை நேரில் ஆராய வழக்கறிஞர்கள் குழுவை உயர் நீதி்மன்றம் அனுப்பியது. நூலகம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை அறிந்த உயர் நீதிமன்றம் உடனடியாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகும் நிலைமை சரியாகவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியில் அதிகார தலைமை மாறியவுடன் அரசியல் சூழலும் மாறத்தொடங்கியது. ஜெயலலிதா ஆட்சியின்போது அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முன்பு புறக்கணிக்கப்பட்டு கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தற்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

புதுப்பொலிவு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த நூலகம் தற்போது புதுப்பொலிவுடன் அனைத்து அடிப்படை வசதிகளுடன் இயங்கி வருவதாக அண்ணா நூலகத்துக்கு வருகின்ற வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். “முன்பு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பராமரிப்பும் முறையாக இல்லை, போதிய புத்தகங்களும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டுவிட்டன. அனைத்துப் புத்தகங்களும் உள்ளன. முன்பு இடம்பெறாமல் இருந்த பள்ளி சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்களும் இப்போது இருப்பதுடன் அவற்றை விலைக்கு வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும்” என்று இந்த நூலகத்துக்கு கடந்த ஓராண்டாக வந்துகொண்டிருக்கும் உள்ளூர் இளைஞர்கள் தினேஷ், முரளி, தங்கராஜ் தெரிவித்தனர்.

அண்ணா நூலக நிர்வாகத்தை கவனிக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் அடிக்கடி இங்கு பார்வையிடுவதை பெருமையுடன் குறிப்பிட்ட அந்த இளைஞர்கள், அவரது முயற்சியால் தற்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை நடைபெறும் ‘பொன்மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் ஆளுமைகள் பங்கேற்று குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வந்து உரையாற்றுவதும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தங்களைப் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கூறினர்.

“ஒபக்” தொழில்நுட்ப வசதி

எந்த புத்தகம் எந்த மாடியில் எந்த அலகில், எந்த அலமாரியில் உள்ளது? என்பதை நொடியில் கண்டறியும் “ஒபக்” (online public access catalogue) என்ற தொழில்நுட்ப வசதி முன்பு நீண்ட காலமாக செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது அந்த வசதி நன்கு செயல்படுவதால் வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தின் பெயர் அல்லது நூலாசிரியர் பெயரை கணினியில் குறிப்பிட்டு ஒரு நொடியில் புத்தகத்தின் இருப்பிடத்தை தெரிந்துகொள்கிறார்கள். நூலகத்தில் இருந்துகொண்டு மட்டுமின்றி வாசகர்கள் வெளியில் இருந்தும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளத்தை (www.annacentenarylibrary.org) பயன்படுத்தி இத்தகவல்களைப் பெறும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தின் பெயர் அல்லது நூலாசிரியர் பெயரை குறிப்பிட்டால் போதும், அந்த புத்தகம் இருக்கிறதா? இல்லையா? இருந்தால் எந்த மாடியில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் நொடியில் தெரிந்துகொள்ளலாம். இதனால், நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகத்தை தேடி அலையவேண்டிய அவசியம் இருக்காது.

4 ஆயிரம் பருவ இதழ்களைப் படிக்க உதவும் டிஜிட்டல் நூலகமும் அண்ணா நூலகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அண்ணா நூலகத்தில் ஏறத்தாழ ரூ.130 கோடி மதிப்புள்ள 5 லட்சத்து 87 ஆயிரம் நூல்கள் உள்ளன. 120-க்கும் மேற்பட்ட இந்திய இதழ்கள் வாங்கப்படுகின்றன. விரைவில் ரூ.5 கோடி செலவில் புதிய புத்தகங்கள் வாங்கவும், 50-க்கும் மேலான சர்வதேச இதழ்கள் வாங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பொதுநூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாடகையில் 60 சதவீதம் சலுகை

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நூல் வெளியீட்டு அரங்கம், கருத்தரங்கக் கூடம், கலையரங்கம் ஆகியவை பொதுநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படுகின்றன. அனைத்து அரங்குகளுமே ஏசி வசதி கொண்டவை. 150 பேர் வரை உட்காரக்கூடிய நூல் வெளியீட்டு அரங்குக்கு ரூ.3,500-ம், 200 பேர் வரை அமரக்கூடிய கருத்தரங்கக் கூடத்துக்கு ரூ.11,000-ம், 1200 பேர் உட்காரக்கூடிய கலையரங்குக்கு ரூ.3 லட்சமும் வாடகை வசூலிக்கப்படுகிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author