Published : 04 Aug 2017 12:03 PM
Last Updated : 04 Aug 2017 12:03 PM

அர்ஜூனா விருது பெறும் தடகள வீரர் மாரியப்பனுக்கு வாசன் வாழ்த்து

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதைப் பெறும் தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''மத்திய அரசு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கி கவுரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வருடத்திற்கான அர்ஜூனா விருதுக்கு 17 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலும் ஒருவர் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மாரியப்பன் கடந்த வருடம் பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்தவர். தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து தமிழக அரசு மற்றும் தமிழக மக்களால் பாராட்டப்பட்டவர்.

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் போது பள்ளியில் கல்வி கற்க வருகின்ற மாணவ, மாணவிகளின் திறமையை வெளிக்கொணர வேண்டும். குறிப்பாக பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை அனைத்து நிலைகளிலும் விளையாட்டுத்துறையில் விருப்பமுள்ள மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி தனிக்கவனம் செலுத்த வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை.

அப்போதுதான் நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாணவ, மாணவிகளில் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள எண்ணற்ற பல பேர் தங்களின் தனித்திறமையை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வெளிப்படுத்தி, சாதனைகள் புரிந்து, பதக்கங்களும், பரிசுகளும் பெற்று தாய் நாட்டின் பெருமையை நிலைநாட்டுவார்கள். இதற்காக மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் உயர் விருதான அர்ஜூனா விருதுக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாரியப்பன் தங்கவேல் அவர்களுக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாரியப்பன் அவர்கள் விளையாட்டுத்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்கி,

சாதனைகள் புரிந்து பல்வேறு விருதுகளைப் பெற்று நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும்.

மேலும் அர்ஜூனா விருது பெறுவதற்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனை ஆயினம் பெம்பெம் தேவி, கிரிக்கெட் வீரர் புஜாரா, வீராங்கனை ஹர்மன் ப்ரீத் கவுர், டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உட்பட 17 வீரர், வீராங்கனைகள் அனைவரையும் தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x