Published : 18 Aug 2017 11:01 AM
Last Updated : 18 Aug 2017 11:01 AM

ரஜினி அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கும் மாநாடு திருச்சியில் ஆக.20-ம் தேதி நடக்கிறது: தமிழருவி மணியன் தகவல்

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாடு திருச்சியில் வரும் 20-ம் தேதி நடத்தப்படுவதாக அதன் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த நிலைக்கு உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை மாற்றிவிட்ட திமுக, அதிமுக, ஆகிய கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்ததில், ஊழல் பொது வாழ்வின் தவிர்க்க முடியாத தீமையாக வியாபித்துவிட்டது. இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்களின் மனத்தில் பதிந்துவிட்டது. தமிழக அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படாதா என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாடு வரும் 20-ம் தேதி திருச்சியில் நடத்தப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றம் நிகழக் கூடுமா? மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் அவரால் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு இம்மாநாட்டில் விரிவாக விளக்கம் தரப்படும். இதில் காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள், ரஜினி ரசிகர்கள், அரசியல் மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x