Published : 12 Aug 2017 03:39 PM
Last Updated : 12 Aug 2017 03:39 PM

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் எடுபடாது: கி.வீரமணி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் எடுபடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக கிராம மக்களின் பிள்ளைகளையும், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களையும் டாக்டராக விடாமல் தடுக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தேவை என்று மத்திய அரசை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தரும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே 2 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அவை மத்திய அரசின் உள்துறையில் நிலுவையில் உள்ளன!

இதற்கிடையே மத்திய அரசின் பிரதமர் தொடங்கி, மத்திய சுகாதார அமைச்சர், மனிதவள அமைச்சர், உள்துறை அமைச்சர்களோடு சந்திப்பு, முறையீடுகள், மீண்டும் ஓர் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் என்றெல்லாம் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் டெல்லிக்குப் பலமுறை படையெடுத்தும் உருப்படியான பலன் ஏதும் இன்று வரை கிடைக்கவில்லை.

மத்திய அரசைப் போட்டிப் போட்டுக் கொண்டு ஆதரித்தும் பலன் என்ன?

மத்திய ஆளுங்கட்சிக்குள் பாஜகவின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களுக்குக் கூட தமிழ்நாட்டு அதிமுகவின் மூன்று அணி எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வாக்களித்து வெற்றி பெற வைத்தும் கூட, டெல்லியின் இசைவு இதுவரை இந்தப் பிரச்சினையில் கிடைக்காதது தமிழ்நாட்டு மக்களை வெட்கமும், வேதனையும் அடையச் செய்கிறது!

இதற்கிடையில் யாரோ சில அதிகாரிகள் கூறிய யோசனைகளை ஏற்று 85 சதவிகித இடஒதுக்கீடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கே என்று ஒரு அரசு ஆணையைப் போட்டது இப்போதுள்ள பழனிசாமி தலைமையில் உள்ள அரசு. அப்போதே நாம் இது சட்டப்படி நிற்குமா என்ற ஐயத்தை எழுப்பவே செய்தோம்!

சென்னை உயர் நீதிமன்றம் இதனைச் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 85 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை செல்லாது என்ற தீர்ப்பை, அது நேற்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் இரட்டை வேடம் எடுபடாது!

ஏதோ ஒப்புக்குப் பேசுவதுபோல இப்படி வித்தைகள் காட்டுவதான தமிழக அரசின் இரட்டை வேடம் எவ்வளவு நாளைக்குச் செல்லும்? நீட் தேர்வுக்கு மக்கள் மன்றம்தான் இறுதி நம்பிக்கையாகும். மக்களைத் திரட்டுவோம்; மனுநீதி சாய்ப்போம்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x