Last Updated : 28 Aug, 2017 09:20 AM

 

Published : 28 Aug 2017 09:20 AM
Last Updated : 28 Aug 2017 09:20 AM

பீம, கணேச ரத சிற்பங்களின் மாதிரி வரைபடம்: அரசு கலைக்கல்லூரி பொறியியல்துறை பேராசிரியர் கண்டுபிடிப்பு

பீம, கணேச ரத சிற்பங்களைச் செதுக்க பாறையின் மீது அளவீடுகளுடன் வரையப்பட்டுள்ள மாதிரி வரைபடம் ஒன்றை, அரசு கலைக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் திருமூர்த்தி மண்டபம் அருகே கண்டறிந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் கால சிற்பக் கலையை பறைசாற்றும் வகையில் ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இதில், ஐந்து ரதம் மற்றும் கணேச, பீம ரதங்கள் மிகவும் துல்லியமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களாக உள்ளன. இந்த சிற்பங்களை யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. மேலும், சிற்பங்களைப் பராமரித்து பாதுகாக்கும் பணிகளை, தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் அமைந்துள்ள கணேச ரதம் மற்றும் பீம ரதத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் அளவீடுகள் குறித்து, திருமூர்த்தி மண்டபம் பகுதியில் பாறையின் மீது சிற்பங்களின் மாதிரி வரைபடம் வரையப்பட்டுள்ளது. இதனை, அரசு சிற்பக் கலைக் கல்லூரியின் பேராசிரியர் கோவிந்தராஜன் கண்டறிந்துள்ளார். இந்த வரைபடம் மிகவும் துல்லிய அளவீடு களுடன் உள்ளதால், பண்டைய காலத்திலேயே கணித அறவியலின் மூலம் சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாமல்லபுரம் அரசு சிற்பக் கலைக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் கோவிந்தராஜன் கூறியதாவது:

திருமூர்த்தி மண்டபத்தின் அருகில் பாறையின் மீது வரைபடம் உளியால் வரையப்பட்டுள்ளது. சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மாமன்னர் நரசிம்மவர்மர் காலத்தில், ஒற்றைக்கால் ரதத்தில் சிற்பக் கலை பணிகளை மேற்கொண்டபோது பீம ரதம் மற்றும் கணேச ரதம் சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளுக்கு, மண்டபத்தின் முகப்பு தோற்ற அளவுகள் குறித்து விளக்குவதற்காகவும் பயிற்சிக்காகவும் வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கலாம். வரைபடத்தில், கணேச ரதத்தின் வடக்கு மற்றும் தெற்குப்புற தோரண பட்டைகளைக் கொண்ட முகப்பு தோற்றம் உள்ளது.

வரைபடத்தில், செங்குத்துப் பரப்பில் மையக் கோடும், கோட்டின் இருபுறத்திலும் இரு சமபக்க முக்கோணமும், அதற்குள் இரு மைய வளைவு களையும் அமைத்துள்ளனர். மையக் கோட்டில் பல்வேறு அளவீடுகளைக் குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன. பாறையின் மீதுள்ள வரை படத்தின் ஒருபகுதியை மட்டுமே நம்மால் காணமுடிகிறது. மற்ற பகுதி மண்ணில் புதைந்துள்ளது.

மண்ணை அகற்றினால், முழு வரைபடத்தையும் காண முடியும். இந்த வரைபடம், பண்டைய காலத்திலேயே சிற்பங்களைச் செதுக்க கணித அறிவியலை பயன்படுத்தியதற்கான சான்றாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் சாதாரணமாக நடமாடும் பாறைகளின் மீது வரைபடம் உள்ளதால், சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. எனவே, வரைபடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x