Published : 11 Aug 2017 08:13 AM
Last Updated : 11 Aug 2017 08:13 AM

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: தாளாளர் உட்பட 9 பேர் விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆர்.பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் துரைராஜ், அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 9 பேருக்கும் 2 முதல் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தண்டனையை எதிர்த்து பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரும், அதே நேரத்தில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் பள்ளித் தாளாளர் சரஸ்வதி, வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார்.

இந்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த 286 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான புலவர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனைக் காலம் போதுமானது. சமையலர் வசந்திக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவரும் சிறையில் இருந்த தண்டனைக் காலம் போதுமானது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கீழமை நீதிமன்றம் விடுவித்த 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படு கிறது.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேல்முறையீடு செய்வோம்

குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் நலச்சங்க செயலாளர் இன்பராஜ் - கிறிஸ்டி தம்பதி கூறியபோது, “தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x