Last Updated : 20 Aug, 2017 10:40 AM

 

Published : 20 Aug 2017 10:40 AM
Last Updated : 20 Aug 2017 10:40 AM

சிறப்பான கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, புத்துணர்ச்சி குறையாத மாணவர்கள்: ஊர்கூடி பள்ளியை வளர்க்கும் மேலூர் கிராம மக்கள் - புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்மாதிரி அரசு தொடக்கப் பள்ளி

தூய்மையான வளாகம், நேர்த்தியான கற்றல், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாணவர்களிடம் வளர்ந்து வரும் புலமை.. என பல காரணங்களால் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்து வருகிறது.

1954-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் கடந்த 2007-ல் 48 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அந்த ஆண்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக அ.கிறிஸ்டி பொறுப்பேற்றார். இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர்களோடு வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் செய்தார். ‘எந்த வசதியுமே இல்லாத பள்ளியில் பிள்ளைகளை எப்படி சேர்க்க முடியும்?’ என்று பெற்றோர் கேட்டுள்ளனர். தரமான கல்வியை வழங்குவதோடு, பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் பெற்றோரின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு ஆசிரியர்கள் வந்தனர். அதன் பிறகு பள்ளி எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பது பற்றி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது:

இந்த கிராமத்தை சேர்ந்த 80 சதவீத மாணவர்கள் வெளியூரில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படித்தனர். உள்ளூரில் விவசாயம் செழிப்படையாததால் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என பிழைப்புக்காக பல ஆண்கள் சென்றுவிட்டனர். பிள்ளைகள் தங்களைப் போல கஷ்டப்படக்கூடாது; வெளியூர் சென்றாவது நன்கு படிக்க வேண்டும் என்று பெற்றோர் கருதியதை உணர முடிந்தது. ஆகவே, தரமான கல்வி அளித்தால், பிள்ளைகளை உள்ளூர் பள்ளியிலேயே சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பள்ளியை மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினோம். மாணவர்களுக்கு ஷூ, டை, ஐடி கார்டு கொடுக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதிக மின்விசிறிகள் பொருத்தப்பட்டன. மாணவர்களிடம் சிறுசேமிப்புத் திட்டம் ஊக்குவிக்கப்பட்டது. பள்ளியின் செயல்பாடுகளில் முன்னேற்றம் காணப்பட்டதால், ஊர் மக்கள் பள்ளிக்கு உதவி செய்யத் தொடங்கினர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்த கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிடங்களையும் மராமத்து செய்து வண்ணம் தீட்ட உதவினர்.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனி இருக்கை, மேஜை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. எழுத்துப் பயிற்சி, தமிழ், ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன் கூடிய வாசிப்பு பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் டைரி கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டபடி தினமும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு, அதில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த டைரிதான் பள்ளியையும் பெற்றோரையும் இணைத்தது. ஆங்கிலவழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பள்ளியில் புரொஜக்டர் வசதி உள்ளது. கணினிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. சகலவசதிகளும் இருப்பதால், புத்துணர்ச்சி குறையாமல் மாணவர்கள் கற்கின்றனர். எங்கள் பள்ளிக்கு ஃபேஸ்புக் கணக்கு, வாட்ஸ் அப் குரூப் உள்ளது. இதன் மூலம் பள்ளியின் செயல்பாடுகளை பெற்றோரும், உள்ளூர், வெளியூர் மக்களும் கவனித்து, பள்ளி வளர்ச்சிக்கான கருத்துகள், ஆலோசனைகளைப் பதிவிடுகின்றனர்.

தற்போது சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருப்பதாலும், தரமான கல்வி கற்பிக்கப்படுவதாலும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை, சிப்காட், அம்மன்பேட்டை என 10 கி.மீ. தொலைவில் இருந்துகூட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந் துள்ளது என்றார் தலைமை ஆசிரியர்.

எழுத்துகள் உச்சரிப்பு குறித்து கற்பிப்பதற்கான காணொலிக் காட்சி, பள்ளிக்கல்வித் துறை மூலம் தயாரிக்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்களைக் கொண்டே இது உருவாக்கப்பட்டதாக தலைமை ஆசிரியர் பெருமையோடு கூறுகிறார். மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது, கடந்த ஆண்டில் இப்பள்ளிக்கு கிடைத்துள்ளது. ஊர் மக்கள் உதவியாலும், ஆசிரியர்களின் திட்டமிட்ட செயல்பாடுகளாலும் இப்பள்ளி வேகமாக வளர்ந்து வருகிறது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94430 72883.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x