Published : 04 Aug 2017 09:36 AM
Last Updated : 04 Aug 2017 09:36 AM

அமைச்சர் விஜயபாஸ்கரின் முடக்கப்பட்ட சொத்துகள் விவரம் என்னிடம் இல்லை: புதிய மாவட்டப் பதிவாளர் விளக்கம்

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம் தொடர்பாக எந்த உத்தரவும் என்னிடம் இல்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் கண்ணன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல் குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏப்ரல் 7-ம் தேதி வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் உள்ளிட்டோரிடம் கடந்த 4 மாதங்களாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வரு கிறது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை முடக்கி வைக்குமாறு வருமானவரித் துறை, புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் சசிகலாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், சசிகலா விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம் தொடர்பாக எந்த தகவலையும் அன்றையதினம் பெற முடியவில்லை. இதுதொடர்பான விவரங்களை அந்த அலுவலகத்தில் இருந்த மற்ற அலுவலர்களும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், திருவேங்கைவாசலில் அமைச்சரின் ஆதரவாளரான கரடிக்காடு சுப்பையா பெயரில் உள்ள கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறது.

புதிய பதிவாளர் பொறுப்பேற்பு

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சார் பதிவாளராக இருந்த கண்ணன், பதவி உயர்வு மூலம் நேற்று புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளராக பொறுப்பேற்றார்.

பின்னர், அவர் அமைச்சரின் சொத்துகள் முடக்கம் தொடர்பாக `தி இந்து’விடம் கூறியது:

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம் தொடர்பாக எந்த உத்தரவும் என்னிடம் இல்லை. அதேபோல, இதுபோன்ற உத்தரவு குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உயர் அலுவலர்களிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் எனக்கு வரவில்லை. மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களும் இதுதொடர்பாக எந்த தகவலையும் எனக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் இந்த சம்பவத்தை தெரிந்துகொண்டேன்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை உயர் அலுவலர்களிடமே தெரிந்துகொள்ளுங்கள். உயர் அலுவலர்களின் அனுமதி இல்லாமல் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.

139 ஏக்கர் நிலம்

2016 தேர்தலில் வேட்பு மனுதாக்கலின்போது, தனது பெயரில் இலுப்பூர் அருகே வீரடிப்பட்டி, மேலூர், மதியநல்லூர், பெருஞ்சுனை, திருவேங்கைவாசல் ஆகிய இடங்களில் 58 ஏக்கரில் வேளாண் நிலம், தனது மனைவி ரம்யா பெயரில் திருவேங்கைவாசல், பணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 81 ஏக்கர் வேளாண் நிலம் என மொத்தம் 139 ஏக்கர் இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மேலும், வேளாண் பயன்பாடு அல்லாத வேறு நிலங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x