Published : 19 Aug 2017 09:04 AM
Last Updated : 19 Aug 2017 09:04 AM

எதிர்பார்ப்புடன் மெரினாவில் திரண்டவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி - அதிகாரப்பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் அடுத்தடுத்து திருப்பங்கள்

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டன. கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், எதிர்பார்ப்புகளுடன் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்துசென்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2 அணிகள் உருவாகின. இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகனை ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்தனர். இதனால், இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் – முதல்வர் பழனிசாமி இடையே கருத்து மோதல்கள் வலுத்தன. இதையடுத்து, தினகரன் தலைமையில் 3-வது அணி உருவானது. தினகரனை சமாளிக்க, ஓபிஎஸ் உடன் இணைய முதல்வர் பழனிசாமி முடிவெடுத்தார். முதலில் தினகரன் நியமனம் செல்லாது என பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்,

ஓபிஎஸ் தரப்பினரின் 2 நிபந்தனைகளையும் பழனிசாமி தரப்பினர் ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இரு அணிகள் இணைப்புக்கான முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக ஓபிஎஸ் நேற்று காலை சென்றார். அப்போது, முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ்-ன் தாயார் உடல்நிலை தொடர்பாக விசாரித்தனர்.

பின்னர், ஓபிஎஸ்ஸுடன் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பிய ஓபிஎஸ், ‘‘இரு அணிகள் இணைப்பு உறுதி. மாலை நடக்கும் கூட்டத்துக்குப்பின் முடிவை அறிவிப்பேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்மலை, பாண்டியராஜன் மற்றும் எம்எல்ஏக்கள், மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன், கே.சி.பழனிசாமி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணிகள் இணைப்பு தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.

அதேநேரத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இருவரின் வீட்டின் முன்பும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

இருதரப்பும் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாலை 6 மணியளவில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நினைவிடத்தை அலங்கரிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல்வர் பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் வர உள்ளதால் ஏற்பாடுகளை செய்ய எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது’’ என்றனர்.

நினைவிடத்தில் இருந்து இருவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்று தகவல் பரவியதால் அங்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இந்த 2 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், இரு அணிகளும் இணையப் போகிறது என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கோஷம் போட்டபடி இருந்தனர்.

முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் எப்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கு புறப்படுவார்கள் என நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இரவு 7 மணி ஆகியும் யாரும் புறப்படுவதாக தெரியவில்லை. 7.30 மணி, 8 மணி, 8.30 மணி, 9 மணி என ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் இப்போது வருவார்கள்... இப்போது வருவார்கள் என காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இரவு 9 மணியைத் தாண்டியும் ஆலோசனை கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் யாரும் வெளியில் வரவில்லை.

கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இரு அணிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மத்தியிலும் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, ஓபிஎஸ் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த இ.மதுசூதனன், பொன்னையன் ஆகியோர் வெளியில் வந்தனர். மதுசூதனன் கூறும்போது, ‘‘அணிகள் இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார்’’ என்றார். தற்போதைய எம்பி, எம்எல்ஏக்களுடனும் அதன்பின், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடனும் தனித்தனியாக 2 கட்டங்களாக ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பினர் எங்கும் வராததாலும் இரு இடங்களிலும் திரண்டிருந்த நிர்வாகிகள் கலையத்தொடங்கினர். 9.30 மணி அளவில் ஓபிஎஸ் அணி செய்தித் தொடர்பாளர் கோவை சத்யா, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நாளை சந்திப்பதாக இருந்தால் அழைப்பு விடுப்போம்’’ என தெரிவித்தார். அதனால், இணைப்புக்காக காத்திருந்த அதிமுகவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அரசு அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x