Last Updated : 29 Aug, 2017 07:58 AM

 

Published : 29 Aug 2017 07:58 AM
Last Updated : 29 Aug 2017 07:58 AM

மத்திய அரசின் ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் 40% மின்சாரம் சேமிக்கும் ஏ.சி. விற்பனை: அடுத்த மாதம் முதல் தொடக்கம்

‘உஜாலா’ திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் எல்இடி பல்புகளை அறிமுகப்படுத்திய இஇஎஸ்எல் நிறுவனம் அடுத்தக் கட்டமாக மின்சாரத்தைச் சேமிக்கக் கூடிய ஏ.சி. இயந்திரங்களை விற்பனை செய்ய உள்ளது.

எரிசக்தியைச் சேமிக்கும் நோக்கில் மத்திய அரசு ‘உஜாலா’ என்ற திட்டத்தைக் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. தமிழக மின்வாரியத்துடன் இணைந்து ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் எல்இடி பல்புகள் விற்பனையை மத்திய அரசு நிறுவனமான எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ் லிமிடெட் (இஇஎஸ்எல்) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்தக் கட்டமாக ஏ.சி. இயந்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. இதுகுறித்து, இஇஎஸ்எல் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (தொழில்நுட்பம்) டி.ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பொதுமக்கள் மத்தியில் எல்இடி பல்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 5.20 லட்சம் எல்இடி பல்புகளும், 1.30 லட்சம் டியூப் லைட்டுகளும், 25 ஆயிரம் மின்விசிறிகளும் விற்பனையாகியுள்ளன. இதையடுத்து, அடுத்ததாக ஏ.சி. இயந்திரங்களை விற்பனை செய்ய உள்ளோம். 1.5 டன் எடை கொண்ட இந்த இயந்திரத்தின் விலை ரூ.54,500. இதைத் தவணை முறையில் மாதம்தோறும் ரூ.1,861 வீதம் 3 ஆண்டுகள் செலுத்தியும் வாங்கலாம். சாதாரண 5 ஸ்டார் ரேட்டிங் ஏ.சி. இயந்திரங்கள் 1,600 வாட் திறன் கொண்டது. எங்களுடைய இயந்திரம் ஆயிரம் வாட் திறன் கொண்டது.

மாதம் 200 யூனிட்கள் சேமிப்பு

இதனால், மற்ற ஏ.சி. இயந்திரங்கள் ஒரு மணி நேரம் ஓடினால் 1.7 யூனிட் செலவாகும். எங்களுடைய இயந்திரத்துக்கு 1 யூனிட் மின்சாரம்தான் செலவாகும். தினமும் 8 முதல் 9 மணி நேரம் இந்த ஏ.சி. இயந்திரத்தைப் பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும். இதன் மூலம், ரூ.1000 வரை மின்கட்டணம் மிச்சமாகும். மேலும், இவை 5 ஸ்டார் ரேட்டிங் ஏ.சி. இயந்திரத்தை விட 40 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது.

3 ஆண்டுகள் வாரண்டியும், ஆண்டுக்கு 3 சர்வீஸ்கள் வீதம் 3 ஆண்டுக்கு 9 சர்வீஸ்கள் இலவசமாக வழங்கப்படும். எக்ஸ்சேஞ்ஜ் வசதியும் உண்டு. அடுத்த மாதம் முதல் இந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 9790924355 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x