Published : 24 Aug 2017 10:31 AM
Last Updated : 24 Aug 2017 10:31 AM

டிடி.நாயுடுவின் ரூ.152 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

டிடி.நாயுடுவின் ரூ.152 கோடி சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் செயல்பட்டு வந்த டி.டி. மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அந்த கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. கல்லூரியின் நிறுவனர் டிடி.நாயுடு என்ற தீனதயாளன், வங்கிகளில் ரூ.136 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ அதிகாரிகளும், மருத்துவ கல்லூரியில் சீட் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து ரூ.16 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக திருவள்ளூர் மாவட்ட போலீஸாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் டிடி.நாயுடு மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பல வழக்குகளில் சிக்கிய கல்லூரியின் நிறுவனர் டிடி.நாயுடு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரியும் மூடப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மோசடி பணத்தில் ஏராளமான சொத்துகளை டிடி.நாயுடு வாங்கியிருப்பது தெரியவந்தது. அதில், முதல் கட்டமாக டிடி.நாயுடு பெயரில் இருந்த ரூ.104 கோடி சொத்துகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகன் மற்றும் மகள் பெயரிலும் டிடி.நாயுடு சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.

ரூ.48 கோடி நிலங்கள்

அதைத் தொடர்ந்து திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் வாங்கப்பட்டிருந்த ரூ.48 கோடி மதிப்புள்ள நிலங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கம் செய்திருப்பதாக அறிவித்தனர். இதுவரை மொத்தம் ரூ.152 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x