Published : 19 Aug 2017 09:28 AM
Last Updated : 19 Aug 2017 09:28 AM

போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி ரயில் நிலையம் அருகே விஜயநகர் பேருந்து நிலையம் மாறுகிறது

வேளச்சேரி நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கவும், ரயில் போக்கு வரத்து வசதியை இணைக்கும் வகையிலும், விஜயநகர் பேருந்து நிலையத்தை வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைகிறது. இதனால், கிண்டியில் இருந்து வேளச்சேரி வழியாக கிழக்கு தாம்பரம் வரையிலான பகுதிகளில் குடியிருப்புகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது. வேளச்சேரி நெடுஞ்சாலையில் விஜயநகர் பேருந்து நிலையம் முக்கிய மையமாக இருக்கிறது. இங்கிருந்து பல்வேறு இடங்க ளுக்கு 250-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்களும் வேளச்சேரி நெடுஞ்சாலையில் சென்று வருகின்றன. தவிர, விஜயநகர் சிக்னலில் வேளச்சேரி நெடுஞ்சாலை - தரமணி சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளும் நடக்கின்றன.

இதனால், இங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வேளச்சேரி நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள மடிப் பாக்கம், பள்ளிக்கரணை, கீ்ழ்கட் டளை உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள விஜய நகர் பேருந்து நிலையத்தை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையம் அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேட்டபோது, மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, மாநகரப் பேருந்து, மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். சென்ட்ரல், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து தற்போது மாநகரப் பேருந்துகள் மின்சார ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, வாய்ப்பு உள்ள மற்ற இடங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். விஜயநகர் சிக்னல் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, விஜயநகர் பேருந்து நிலையத்தை வேளச்சேரி பறக்கும் மின்சார ரயில் நிலையத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விஜயநகர் சந்திப்பில் நடக்கும் மேம்பாலப் பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேம்பாலங்கள் கட்டுவதால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர்ந்துவிடாது. சாலை கள் விரிவாக்கம், பேருந்து நிலையம் ரயில் நிலையங்கள் இணைந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் அவ சியம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x