Published : 14 Aug 2017 09:22 AM
Last Updated : 14 Aug 2017 09:22 AM

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது: அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக (அம்மா) கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, சிறையில் இருந்தபடி தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா இருந்த நொடி வரை அரசியல் களத்தில் நம்மை எதிர்கொள்ள முடியாமல் அரசியல் எதிரிகள் துவண்டு கிடந்தனர். இந்த இயக்கம் எம்ஜிஆரால் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அதில் குறைவில்லாமல், அரசியல் களத்தில் தீயசக்திகள் தலையெடுக்க முடியாதபடி, ஜெயலலிதாவின் விவேகமான பொதுவாழ்க்கை, அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் துடைத்தெறிந்தது.

புகழின் உச்சாணிக் கொம்பில் இருக்கும்போதே ஜெயலலிதாவை இயற்கை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற இடத்தை எவராலும் இனி நிரப்ப முடியாது என்றாலும், இந்த இயக்கத்தின் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களின் முன்னால் இப்போது மிகப் பெரும் கடமை காத்திருக்கிறது. ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரிகள் பயன்படுத்திக்கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டுமே போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதை ஜெயலலிதா இந்த இயக்கத்தில் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது இந்த இயக்கத்தில் மட்டுமே சாத்தியம். எத்தனையோ நெருக்கடிகளைத் தாண்டி சிறுபான்மையினர் நலனை இறுதிவரை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தினார். அதிமுக என்ற இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தவர் ஜெயலலிதா. அதை நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.

இந்தியாவின் 3-வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் உள்ள இந்த இயக்கம் சிறிதும் கீழிறங்கிவிடக் கூடாது என்ற அக்கறையாலும், தொண்டர்களின் அன்புக்கட்டளையாலுமே இந்த பொதுவாழ்வு என்ற வேள்வியில் என்னை அர்ப்பணித்தேன்.

ஜெயலலிதா இருந்தால் நாம் எவ்வாறு உணர்வோமோ, அதே உணர்வுடன் நீங்கள் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து உணரலாம். நம் கண்முன் ஜெயலலிதா காட்டிய லட்சியப்பாதை விரிந்து கிடக்கிறது.

அதில் அதிமுகவின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். வீழ்ந்தே கிடக்கும் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா, தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வேளையில் முன்பைவிட உறுதியாய், அன்பில் அடர்த்தியாய், கட்சியையும் தமிழகத்தையும் கண்களென காத்திட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதாவின் நாமத்தின் பேரில் சூளுரை ஏற்போம். இவ்வாறு கடிதத்தில் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x