Published : 19 Aug 2017 09:33 AM
Last Updated : 19 Aug 2017 09:33 AM

ஓய்வூதியர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்: ரயில்வே இணை அமைச்சர் உத்தரவு

இந்திய ரயில்வேத் துறையில் மொத்தம் 14 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இதில், தெற்கு ரயில்வேயில் மட்டுமே 1.46 லட்சம் பேர் உள்ளனர். ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம், ஓய்வுகால பலன்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அவர்கள் தெரிவிக்கும் வகையில் ரயில்வே இணையதளத்திலேயே தனிப்பிரிவு இருக்கிறது. ஆனால், ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்காமல் காலதாமதம் செய்வதாக ரயில்வே அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் அலுவலகம், அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும், அவர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களும் சரியான கவனம் செலுத்துவதில்லை.

எனவே, இதுபோன்ற பிரச்சி னையை தீர்க்க ஓய்வூதியர் களுக்கென இணையதள வசதி விரைவில் கொண்டுவரப்படும். இதன்மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உடனுக்குடன் தங்களுக்கான சலுகைகளைப் பெறுவதுடன், வீண் அலைச்சலை யும் தவிர்க்க முடியும்.

இந்த வசதி வரும் வரையில் அந்தந்த ரயில் கோட்ட மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒய்வூதியர்களின் புகார்கள் மீது ஆய்வு நடத்த வேண்டும். தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்த அறிக்கையை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x