Published : 06 Aug 2017 09:48 AM
Last Updated : 06 Aug 2017 09:48 AM

பணியிட மாற்றம், மாற்றுப்பணி பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் போக்குவரத்து ஊழியர்கள்

போக்குவரத்து துறையில் பணியிட மாற்றம், மாற்றுப்பணி மற்றும் பணி நிரந்தரம் பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஊழியர்கள் ஏமாற்றமடைகின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வேண்டும், ஓய்வுகால பணப் பலன்கள் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மற்றொருபுறம், புதிய ஊழியர்கள் நியமனம், பணி நிரந்தரம், பணியிட மாற்றம், மாற்றுப் பணி பெறுதல் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, பணி நிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம், மாற்றுப் பணி வழங்க ரூ.40 ஆயிரம், பணியிட மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்கிறார்கள். இதற்கு போக்குவரத்து அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தண்டையார்பேட்டை பணிமனையை சேர்ந்த நடத்துநர் ஒருவர் தனது புகாரை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்து துறை யில் நிரந்தர பணி கிடைக்கும் என நம்பி இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தினக்கூலி தொழிலாளர்கள் அடிப்படையில் பணிக்கு வந்தோம். நாங்கள் வந்து சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். கொடுத்த பணம் திரும்பி கிடைத்தாலேயே போதும், வேறு வேலையைப் பார்த்துக் கொள்வோம். போக்குவரத்து நெரிசலால் நிர்வாகம் அளிக்கும் பணிகளை முடிக்க 12 மணிநேரம் ஆகிறது.

தினமும் பணியை முடித்து வீட்டுக்கு செல்லும்போது உடல் வலியாலும், மனச்சோர்வாலும் அவதிக்குள்ளாகிறோம். ஆனால், இன்னும் பணி நிரந்தரம் பெற முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி நேதாஜி போக்கு வரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலா ளர் கே.அன்பழகன் கூறியதாவது:

மாநகரப் போக்குவரத்து கழகத் தில் நான் நடத்துநராக பணியாற்றி வந்தேன். உடல்நலக் குறைவினால் 3 அறுவைச்சிகிச்சைகளை செய்து கொண்டேன். 2011-ல் உரிய மருத்துவச் சான்றிதழ்களை நிர் வாகத்திடம் வழங்கி மாற்றுப் பணி வேண்டுமென கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், அவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மூலம் வாருங்கள் என்றனர். இடைத்தரகர்கள் எனக்கு மாற்றுப்பணி வாங்கித்தர ரூ.40 ஆயிரம் வரை லஞ்சமாகக் கேட்டனர். அதன்பிறகு, நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பணியில் சேர்ந்தேன். எனவே, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல், நீதிமன்றம் மூலமும் தொழிலாளர்கள் தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசுப் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘இது தொடர்பாக ஊழியர்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 3 மாதங்களில் 6 பேர் மீது தற்காலிக பணியிட நீக்கம், பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க நிர்வாக இயக்குநர் களுக்கு உத்தரவிட்டுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x