Last Updated : 16 Aug, 2017 12:02 PM

 

Published : 16 Aug 2017 12:02 PM
Last Updated : 16 Aug 2017 12:02 PM

சட்டப் போராட்டத்துக்கு தீர்வு கண்ட சமரச தீர்ப்பாயம்: 25 ஆண்டுகளுக்கு பிறகு வீடுகளை சொந்தமாக்கிய 107 பயனாளிகள்

‘கொடுத்த பணத்துக்கு வீடு கிடைத்தது. ஆனால் அதை சொந்தமாக்கிக் கொள்ள வீட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை’ என வீட்டுவசதி வாரியத்தை வலியுறுத்தி 107 குடும்பங்கள் கோவையில் பல ஆண்டு களாகப் போராடி வந்தன. சுமார் 25 ஆண்டு கால போராட்டத்துக்கு, தற்போது சமரசத் தீர்வு மையத்தின் மூலமாக (லோக் அதாலத்) தீர்வு கிடைத்துள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு நியாயமான விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகிறது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். கோவை கணபதியில் வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1989-ல் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1992-ல் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டது. அதில் சில நில உரிமையாளர்கள், நிலத்துக்கு கூடுதல் விலைகேட்டு வழக்கு தொடர்ந்ததால் பி பிளாக்கில் உள்ள 107 குடும்பங்களுக்கு மட்டும் கிரையப்பத்திரம் கிடைக்கவில்லை.

நில உரிமையாளர்களுக்கும், வாரியத்துக்குமான பிரச்சினையில் மாதத் தவணை யில் வீடு வாங்கிய பயனாளிகள் சிக்கிக் கொண்டனர். எப்படியாவது பிரச்சினையை முடித்து, வீட்டுமனைகளை சொந்தமாக்கிக் கொடுங்கள் என 107 பயனாளிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்திவிட்டனர். கடைசியில் நில உரிமையாளர்களை பயனாளிகளே சந்தித்துப் பேசி, சமரச தீர்வு மையம் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள். பல பகுதிகளில் இதுபோல தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு இந்த சம்பவம் முன் உதாரணமாகியுள்ளது.

பிரச்சினைக்குத் தீர்வு

கணபதி வீட்டுவசதி வாரிய ‘பி’பிளாக் (தென்றல்நகர் பொதுநல சங்கம்) தலைவர் பி.துரைசாமி கூறும்போது, ‘குறைந்த, மத்திய, உயர்நிலை என வருவாய் வாரியாக பிரித்து வழங்கப்பட்ட வீடுகளுக்கு 2003ல் (13 ஆண்டுகள்) மாதத் தவணை செலுத்தி முடித்துவிட்டோம். ஆனாலும் கிரையப்பத்திரம் கிடைக்கவில்லை. வாரியத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் கோவை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். வாரியமோ, அந்த வழக்கை முடிப்பதற்குப் பதிலாக வாய்தா மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது. இதற்கு தீர்வு காண வேண்டுமென 25 ஆண்டுகள் போராடினோம்.

100-க்கும் மேற்பட்ட போராட்டங்கள், ஆயிரக்கணக்கான மனுக்கள் என அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் வலியுறுத்தினோம். உறுதி கூறினார்களே தவிர, தீர்வு கிடைக்கவில்லை. கோவையில் இதேபோன்ற ஒரு பிரச்சினைக்கு லோக்அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு சென்ட்டுக்கு ரூ.4000, சட்டப்பூர்வ வட்டி கொடுத்து அந்த பிரச்சினையை முடித்ததும் தெரியவந்தது. அதேபோல இப்பிரச்சினையையும் முடிக்க நீதிபதி ஆலோசனை வழங்கினார். எனவே 2 மாதம் அவகாசம் எடுத்து நில உரிமையாளர்கள் 35 பேரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

லோக் அதாலத்தில் சமரசத் தீர்வு ஏற்பட்டது. வாரியத்தின் மூலம் அவர்களுக்கு ரூ.5.59 கோடி கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டப் போரட்டங்கள் சமரசத் தீர்வின் மூலமாக முடித்து வைக்கப்பட்டது. ஒரு சதுர அடிக்கு ரூ.203 வீதம் வாரியத்துக்கு பயனாளிகள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தி விட்டால், உடனடியாக வீடுகளுக்கான கிரையப்பத்திரம் எங்களுக்கு கிடைக்கும். நியாயமான போராட்டமும், பேச்சுவார்த்தை மூலமான சமரசத் தீர்வும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வைக் கொடுத்துள்ளது’ என்றார்.

கோவை வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டு மேலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘பயனாளிகளுக்கு நீண்ட கால போராட்டத்துக்கு லோக் அதாலத் மூலமாக தீர்வு கிடைத்துள்ளது. அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகைகளை செலுத்திய பிறகு வீட்டுமனைகளுக்கான பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளோம்’ என்றார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வீடுகள் தங்களுக்கே சொந்தமாகப் போவது பயனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது பெரிய நோக்கம். அதையும்கூட பிரச்சினைகள் இல்லாத வகையில் செய்து கொடுத்தால் வாரியத்தின் நோக்கம் இன்னும் பல மடங்கு வீரியமாக இருக்கும் என்கின்றனர் பயனாளிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x