Last Updated : 15 Aug, 2017 12:54 PM

 

Published : 15 Aug 2017 12:54 PM
Last Updated : 15 Aug 2017 12:54 PM

வாய்ப்புகள் இல்லாததால் நலிவடைந்து வரும் நாடக கலைஞர்கள்: உதவிக் கரம் நீட்டுமா இந்து சமய அறநிலையத்துறை?

வாய்ப்புகள் இல்லாததால் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை தரம் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. எனவே, தங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முந்தைய காலங்களில் கோயில்களில் திருவிழாவின்போது, அரிச்சந்திரா, லவகுசா, வள்ளி திருமணம் உள்ளிட்ட பல நாடகங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதுபோன்ற நாடகங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. காலப்போக்கில் நாடகங்கள் நடத்தப்படுவது குறைந்து இன்னிசை நிகழ்ச்சி (ஆர்க்கெஸ்ட்ரா), ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

இதையடுத்து, கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்தப்படுவது வெகுவாக குறைந்துவிட்டன. இதனால், நாடக கலைஞர்கள் வாய்ப்புகள் இல்லாமல் நலிவடைந்த நிலையில் உள்ளனர். இதில், பலர் விவசாய கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் சென்று குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாடகக் கலைக்கு உயிரூட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடகக் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நாடகக் கலைஞர் ஆதிமூலம் கூறியதாவது:

புராண நாடகங்களின் மீது உள்ள நாட்டம் மக்களிடையே குறைந்து வருகிறது. கோயில் திருவிழா சமயங்களில் மட்டும் மாதத்துக்கு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

15ty_ari harichanra story5 நாடகக் கலைஞர் ஆதிமூலம்.

காலப்போக்கில் இந்த கலை முற்றிலும் அழிந்துவிடும் நிலை உள்ளது. இதைக்காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, புராண நாடகங்களை கோயில்களில் நடத்துவதற்கான செலவை இந்து சமய அறநிலையத் துறை ஏற்க வேண்டும்.

அப்படி செய்தால், மக்களிடத்தில்ஆன்மிக நற்சிந்தனைகள் வளர்வதுடன், வாய்ப்பில்லாமல் பரிதவிக்கும் நாடகக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, இந்தக்கலையை அழிவுப்பாதையை நோக்கிச்செல்வது தடுக்கப்படும்.

மேலும், 58 வயது நிரம்பிய நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், அதுபோன்ற மூத்த கலைஞர்களைப் பயன்படுத்தி இளம் கலைஞர்களை உருவாக்கும் வகையில், பயிற்சி வகுப்புகள் நடத்தி, புதிய மேடை நாடகக் கலைஞர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x