Published : 22 Aug 2017 03:04 PM
Last Updated : 22 Aug 2017 03:04 PM

முதல்வர் பழனிசாமி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பொறுப்பு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனித் தனியாக வழங்கியுள்ள கடிதங்களையடுத்து, தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து, வரலாறு காணாத அரசியலமைப்பு சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சூழ்நிலை ஒன்றின்போது, அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை, கர்நாடக மாநில ஆளுநர் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதங்களை கொடுத்த நாளிலேயே உத்தரவிட்டார்.

முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏதாவது ஏற்படும் நிலையில், அரசியலமைப்புக்கு சட்டத்திற்கு விரோதமான அரசு தொடரவும், பேரவையின் நம்பிக்கையை பெறுவதில் நிலை நாட்டப்பட்டுள்ள ஜனநாயக மரபுகளை தகர்ப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்து விடும். மேலும், தற்போது பதவியில் உள்ள முதல்வர் கடந்த முறை பெரும்பான்மையை நிரூபித்தபோது நடந்தது போலவே, குதிரை பேரம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் சூழலுக்கு வழியேற்படுத்தி விடும்.

ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், எடப்பாடி பழனிசாமி உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென பொறுப்பு ஆளுநர் உத்தரவிட்டு, எஸ்.ஆர்.பொம்மாய் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் புகழ்மிக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டிய அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x