Published : 07 Aug 2017 08:39 AM
Last Updated : 07 Aug 2017 08:39 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு 2,536 மையங்களில் நடந்தது: 1,953 இடங்களுக்கு 5.5 லட்சம் பேர் போட்டி - தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பேர் கண்காணித்தனர்

 

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,953 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2ஏ தேர்வு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 2,536 மையங்களில் சுமார் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

அரசுத் துறைகளில் உதவியாளர், தலைமைச் செயலகத்தில் நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் 1,953 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 52 ஆயிரத்து 916 பேர் விண்ணப்பித்தனர்.

அதில் பல்வேறு காரணங்களால் 4,443 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 7 லட்சத்து 48 ஆயிரத்து 473 விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டன. இவர் களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தமிழகம் முழுவதும் 2,536 மையங்களில் குரூப்-2ஏ தேர்வு நேற்று நடந்தது. 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர்.

பலத்த கண்காணிப்பு

காலை 10 முதல் 1 மணி வரை நடந்த தேர்வை தமிழகம் முழு வதும் மொத்தம் 37,646 கண் காணிப்பாளர்கள் கண்காணித்தனர். மையத்துக்கு ஒருவர் என மொத்தம் 2,536 பேர் முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக் கப்பட்டிருந்தனர். தேர்வில் முறை கேடுகளைத் தடுக்க 503 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 268 பறக்கும் படைகளும் அமைக்கப் பட்டிருந்தன.

தேர்வு நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிரச்சினைக்குரிய தேர்வு மையங்களாக கண்டறியப்பட்ட 31 மையங்கள் வெப்-கேஸ்டிங் (இணையதள நேரடி ஒளிபரப்பு) முறையில் கண்காணிக்கப்பட்டன. இந்தக் கண்காணிப்புப் பணிகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் நடந்தன.

குழந்தைகளுடன் வந்த தேர்வர்கள்

தேர்வில் கலந்துகொள்ள காலை 8 மணி முதலே ஏராளமானோர் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். பல பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகளை உடன் வந்திருந்த உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்ட மின்னணுக் கருவிகள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் எம்சிடிஎம் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளி உட்பட 259 மையங்களில் சுமார் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

குரூப்-2ஏ தேர்வுக்கு விண்ணப் பித்தவர்களில் 73 சதவீதம் பேர் தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித் தனர். குரூப்-2ஏ பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி என்கேடி பள்ளியில் தேர்வு எழுதிய பட்டதாரிகள். (அடுத்த படம்:) பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி சொல்லச் சொல்ல, வேறொருவர் தேர்வு எழுதுகிறார்.

படங்கள்: க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x