Published : 16 Aug 2017 09:13 AM
Last Updated : 16 Aug 2017 09:13 AM

சசிகலா குடும்பத்தால் ஜெ.வுக்கு இழுக்கு: குன்னம் எம்எல்ஏ ராமசந்திரன் புகார்

சசிகலா குடும்பத்தால்தான் ஜெயலலிதாவின் பொது வாழ்க்கையில் இழுக்கு ஏற்பட்டதாக குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டம் தீட்டியதை தெரிந்துகொண்ட ஜெயலலிதா அந்த குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விலக்கி வைத்தார்.

பிறகு சசிகலா ‘எங்களுடைய குடும்பத்தினர் யாரும் கட்சிப் பணிகளிலோ அரசியல் பணிகளிலோ ஈடுபடமாட்டோம்’ என்று மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்ற ஜெயலலிதா சசிகலாவை மட்டும் தனக்கு துணையாக இருக்க அனுமதித்தார். சசிகலா குடும்பத்தினர் வேறு யாரையும் அவர் உயிருடன் இருக்கும் வரை சேர்த்துக்கொள்ளவில்லை.

அதிமுகவுக்காக தினகரன் கொடிப் பிடித்து தொண்டனாக செயல்பட்டு இருக்கிறாரா? அவர் கட்சிக்கு ஆற்றிய அரசியல் பணிகள் என்ன என்பதை அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் சொல்வதுபோல் ஜெயலலிதாவை இமையை காப்பது போல் காத்திருந்தால் அவர் இவ்வளவு சீக்கிரம் உடல்நலம் குன்றியிருக்கமாட்டார்.முதல்வர் பழனிசாமி, உதயகுமார், ஜெயக்குமார் போன்றவர்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக கட்சிக்காக உழைத்தவர்கள்.

ஜெயலலிதாவுக்கு அதிகமாக சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சசிகலாவின் குடும்பத்தின் சுயலாப நோக்கத்தால்தான், பொது வாழ்வில் தூய்மையாக இருந்த ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த குடும்பத்தால்தான் அவருக்கு இழுக்கு ஏற்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x