Published : 30 Aug 2017 09:17 AM
Last Updated : 30 Aug 2017 09:17 AM

கட்சி, சின்னத்தை மீட்க முதல்வர் பழனிசாமி அணி மும்முரம்: எங்கள் கருத்தை கேட்காமல் முடிவெடுக்க கூடாது - தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனு

அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்க முதல்வர் பழனிசாமி அணி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்தைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பு மனு கொடுத்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தமிழகத்தில் தினமும் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தற்போது டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது. அணிகள் இணைந்ததை சுட்டிக்காட்டி அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதற்காக அமைச்சர்கள் குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் ஏற்கெனவே அளித்துள்ள பிரமாணப் பத்திரங்களை திருப்பப் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்கள் கருத்தைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்பி அன்பழகன், கட்சி வழக்கறிஞர்கள் ஆகியோர் நேற்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் புகழேந்தி கூறியதாவது:

அதிமுக இரு அணிகளும் இணைந்துவிட்டதால் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்கும் நோக்கில் மனு கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும்போது எங்களையும் அழைத்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்பு எங்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.

கட்சி, இரட்டை இலைக்கு எதிராக ஓபிஎஸ்தான் புகார் கொடுத்தார். இதில், அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் எதிர்மனுதாரர். அவர் சார்பில்தான் வந்திருக்கிறேன். இப்பிரச்சினையில் முதல்வர் பழனிசாமிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 லட்சம் பிரமாணப் பத்திரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பத்திரங்களில் முதல்வர் கே.பழனிசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற இயலாது.

பொதுக்குழுவைக் கூட்ட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதையும் மீறி பொதுக்குழு நடந்தாலும் சசிகலா, டிடிவி தினகரனை நீக்க முடியாது. தற்போது தினகரன் வசம்தான் அதிமுக உள்ளது. ஆட்சியை நாங்கள் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x