Published : 02 Aug 2017 02:42 PM
Last Updated : 02 Aug 2017 02:42 PM

நீட் விவகாரம்: பிரதமர் மோடியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். கடந்த 3 வாரங்களில் பிரதமர் மோடியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு விலக்களிக்க வேண்டி தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் குழு புதுடெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 31.07.2017அன்று முதல் புதுடெல்லியில் முகாமிட்டு மாண்புமிகு மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்களை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங்கையும் சந்தித்து வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து (01.08.2017) அன்று புதுடெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்திற்கு மக்களவை துணை சபாநாயகர் திரு. மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

புதுடெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (02.08.2017) மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை துணை சபாநாயகர் திரு. மு.தம்பிதுரையுடன் மீண்டும் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

இந்நிகழ்வின்போது புதுடெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x