Published : 19 Aug 2017 12:37 PM
Last Updated : 19 Aug 2017 12:37 PM

அமித் ஷா அவதாரப் புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் இல்லை: நாஞ்சில் சம்பத்

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னதாக அதிமுக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதாலேயே இரு அணிகள் இணைப்பில் தீவிரம் காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், "அமித் ஷா அவதாரப் புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் இல்லை" என்றார்.

அதிமுகவின் இரு அணிகளும் நேற்றைக்கு இணையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், டிடிவி தினகரன் இல்லத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன், சுப்ரமணியன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் சென்றனர். டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பின்னர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எல்லா அறைகூவல்களையும் சந்திக்க டிடிவி தயாராக உள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் அடுத்த கூட்டம் ஆக.23-ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறும். மேலூர் பொதுக்கூட்டத்தைவிட இதை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம்.

ஓபிஎஸ் அணியுடன் இணைய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி தான் கூற வேண்டும். அணிகள் இணைப்பில் அவசரம் காட்டப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அள்ளி சுருட்ட வேண்டும் என்ற அவசரத்தில் இணைப்பை முன்னெடுத்துள்ளனர். ஒருவேளை இரு அணிகளும் இணைந்தால் எங்களுக்கான பாதை விரிவடைந்துவிடும்; நாங்கள் நேராக சென்றுவிடுவோம்.

அணிகள் இணைப்பு என்ற கேலி கூத்து நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்பில்லை. எந்த நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் ஏற்க தயாராக இல்லை" என்றார்.

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னதாக அதிமுக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதாலேயே இரு அணிகள் இணைப்பில் தீவிரம் காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், "அமித் ஷா அவதாரப் புருஷனும் அல்ல; தமிழகம் குஜராத்தும் இல்லை" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x